நாளை திங்கட் கிழமை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில் கல்முனையில் பெருந் தொகையான மக்கள் ஒன்றுசேரக்கூடிய இடமாகக் காணப்படும் கல்முனை பொதுச் சந்தையில் மக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது தொடர்பாக இன்று கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் உயர் மட்டக் கூட்டம் கூடி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலாளர்  உட்பட கல்முனை மாநகர சபை உயரதிகாரிகள் ,மாநகர சபை சுகாதாரக்குழு  உறுப்பினர்கள், சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க தலைவர்,செயலாளர்  என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 03 தினங்களாக மூடப்பட்டிருந்த பொதுச்சந்தை திறக்கப்படுகின்ற நிலையில் பொருட் கொள்வனவுக்காக பெருமளவு  மக்கள் கூடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறான அவசர உயர்மட்டக் கூட்டம் கூட்டப்பட்டது.

சந்தை உட்பகுதியில் சில்லறைக் கடைகளை மாத்திரம் திறப்பதற்கும் வர்த்தகர்களும் நுகர்வோரும் முக கவசம் அணிவதோடு மூன்று பேருக்கு மேற்பட்டோர் ஒன்று சேரக் கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டதோடு வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கை கழுவுவதற்கு தொற்று நீக்கி பாவனைக்கு வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த தவறினால் குறித்த வர்த்தக நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளை கல்முனை நகருக்குள்  பொருட்கள்  கொல்வாவுக்காக பிரவேசிக்க ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரம் அனுமதிக்கப்படுவதுடன் வருகின்ற அனைவரும் முக கவசம் அணிந்து வருதல் வேண்டும் தவறும் பட்சத்தில் முக கவசம் அணியாதவரை நகருக்குள் அனுமதிப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று மரக்கறி வியாபாரம் பொதுச் சந்தைக்கு முன்னால் உள்ள வாடிவீட்டு வீதி மற்றும் பௌத்த விகாரை வீதி இரு மருங்கிலும் இடம் பெற வேண்டும் ஒவ்வொரு வியாபாரிக்குமிடையில் 05 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்.


அதே போல் பாரிய வாகனங்கள் சந்தாங்கேணி மைதானத்திலும், மோட்டார் சைக்கிள்கள் பிஸ்கால் காணியிலும்,முச்சக்கர வண்டிகள் பாபுஜீஸ் முன்னால் உள்ள காணியிலும் நிறுத்தி வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை  மீறுவோர் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

 
Top