கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் தெரிவிக்கிறார் .
யு.எம்.இஸ்ஹாக் 


கோவிட் -19 கொராணா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேசிய வேலைத் திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்ட  போதிலும்  ஊரடங்கு சட்டம் தளர்த்தும் வேளையில் கல்முனை நகரத்தில் நடை பெறுகின்ற வர்த்தக நடவடிக்கைகள்  பாதுகாப்பற்றனவாகவே காணப்படுகின்றன.  கல்முனை நகரில் நடை பெறும்  வர்த்தக நடவடிக்கைக் காரணமாக  வைரஸ் தொற்று இலகுவாக  பரவுவதற்கான  சாதகமான சூழலே காணப்படுகின்றது.  இதற்கு  ஒரு போதும்  சுகாதார திணைக்களம்  உடன்படப்போவதில்லை என்று  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் தெரிவிக்கிறார் .
கல்முனை பிரதேசத்திலுள்ள  ஒவ்வொரு வீடுகளுக்கும் உணவுப் பொருட்கள் சென்றால் மாத்திரமே கல்முனை நகரில் ஒன்று கூடும்  மக்கள் தொகையை கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவிக்கிறார்.


கோவிட் -19 கொராணா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு கல்முனை மாநகர   முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில்  செயலணி ஒன்று  நிறுவப்பட்டு அந்த செயலணி இரண்டு தடவைகள் கூடி பல முடிவுகளை தீர்மானித்து  செயற்படுத்தியுள்ளது .


இந்த செயலணியில் கல்முனை ,சாய்ந்தமருது,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்கள் , கல்முனை பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி , இராணுவ ,கடற்படை முகாம் பொறுப்பதிகாரிகள் ,சுகாதார வைத்திய அதிகாரிகள் , பொது சுகாதாரப்பரிசோதகர்கள் , கல்முனை மாநகர சபை ஆணையாளர் உட்பட மாநகர சபை மக்கள் பிரதிநிதிகள் , கல்முனை நகர ,பொதுச்சந்தை  வர்த்தக சங்க தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர் .

இச்செயலணியின்  இரண்டாவது அமர்வு கடந்த புதன் கிழமை (25) கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடை பெற்றது . இந்த அமர்வில் கருத்து  தெரிவிக்கும் போதே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் தெரிவித்தார் .அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் மூன்று நாட்கள் ஊரடங்கு சட்டத்தை மதித்து  கட்டுப்பாட்டுடன் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்த மக்கள் ஊரடங்கு தளர்த்தியவுடன்  கட்டுப்பாடுகளையும் மீறி பெருந்திரளான மக்கள் கல்முனை நகருக்குள் வருகை தருகின்றனர்.  பொருட் கொள்வனவிற்காக வருகை தரும் மக்கள் சுகாதார விதி முறைகளுக்கப்பால் மிக நெரிசலாக காணப்படுவதால் மூன்று நாட்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பை பேணியதில் அர்த்தமில்லாமல்  போகின்றது. எனவே  மக்களை பாதுகாக்கும் திட்டத்தின் அடிப்படையில்  கல்முனை நகருக்குள் பிரவேசிக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வீடுகளுக்கு உணவுகளையும் அத்தியாவசியப்பொருட்களையும் எடுத்து செல்ல திட்டம் வகுக்கவேண்டும் அவ்வாறு செய்யாது மூன்று நாட்களுக்கொரு தடவை மக்களை ஒன்று சேர்த்துவிட்டு மக்களைப்பாதுகாக்க முடியவில்லையென்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது .மக்கள் இவ்வாறு பெருந்தொகையாக ஒன்றுசேர்வதால் அதனை கட்டுப்படுத்த பொலிஸாரும் ,பாதுகாப்பு படையினரும் ,சுகாதார துறையினரும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top