ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவலை பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று (31) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த 12 தொடக்கம் 15 திகதி வரை டிக்கோயா தரவலை பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நடைபெற்ற தேவ ஆராதனை தொடர்ந்து கடந்த 29 திகதி முதல் அவ் ஆலயத்தின் போதகர் உட்பட 09 பேர் ஏப்ரல் 02 திகதி வரை தனிமை படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது மேலும் சிலர் யாழ்ப்பாணம் தேவ ஆராதனையின் போது கலந்து கொண்டுள்ளதாக உறுதி செய்யப்படுத்தப்பட்டதை அடுத்து டிக்கோயா ஆராதனையிலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உலர் உணவு பெற்றுக்கொண்ட குடும்பங்களும் ஆராதனையில் கலந்து கொண்ட 65 குடும்பங்கள் உட்பட கொழும்பு அவதான பகுதியிலிருந்து வருகை தந்த குடும்பங்களைச் சேர்ந்த 200 குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன.

இவர்கள் தனிமைப்படுத்தும் விதிகளை மீறும் பட்சத்தில் இத்தோட்டத்திற்கு சீல் வைக்க நேரிடும் என அம்பகமுவ பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி கிசான் பிரேமசிறி தெரிவித்தார்.

இதே வேளை தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதனால் தோட்ட நிர்வாகம் இதற்கு பூரண ஒத்துழைப்பினை தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதே வேளை, கடந்த வாரங்களில் கொழும்பு மற்றும் அவதான பிரிவுகளிலிருந்து சுமார் 846 பேர் நுவரெலியா மாவட்டத்தில் இது வரை தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருப்பதாகவும், இவ்வாறு வந்தவர்கள் சிலர் அறிவிக்காது இருப்பதாகவும் அதனால் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அவர் இதன் போது தெரிவித்தார்.

தனிமை படுத்துபவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை வழங்கவும் டிக்கோயா நகர சபையின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதுடன் அவர்களின் குடும்ப விபரங்களை பெற்றுக்கொண்டு அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுப்பதாக நகர சபையின் தலைவர் பாலசந்திரன் இதன் போது தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது ஹட்டன் பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரி, சுகாதார பரிசோதகர் காமதேவன், ஐ.என்.ஜி பெரேரா மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நுவரெலியா மாவட்டம் உட்பட சுகாதார பிரிவினரை சேர்ந்தவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் பாலசந்திரன் உட்பட தோட்ட நிர்வாக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top