- நாளை ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதம்
- மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காபந்து அரசு
தான் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து செயற்படுவதால், புதிய ஜனாதிபதிக்கு அரசாங்கத்தினை கொண்டு செல்வதற்காக பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாளை (21) கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வபாக அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளைய தினம் (21) எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக பதவியில் இருப்பார் என  தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 15 பேர் கொண்ட காபந்து அரசாங்கமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவி விலகல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை,
கடந்த ஐந்து வருட காலத்தினுள் எமது நாட்டில் ஜனநாயகம், மனித சுதந்திரம், கருத்து வெளியிடல் மற்றும் தகவல் அறியும் உரிமை, சமத்துவம் மற்றும் சகவாழ்வினை உறுதிப்படுத்துவதற்காக நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதே போன்று நிலைபேறான அபிவிருத்தியினை நோக்கி தேசத்தை வழி நடாத்தினோம்.
19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அனைத்து நிறுவனங்களையும் அரசியல் தலையீட்டில் இருந்து மீட்டோம். கடந்த ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும், நேர்மையாகவும் இடம்பெற்றமை அதன் பயனாலேயாகும்.
நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சரியான தீர்ப்பினை எதிர்காலம் வழங்கும்.
நான் 19ம் திகதி கோடாபய ராஜபக்ச ஜனாதிபதியவர்களை சந்தித்தேன். அவருடன் பாராளுமன்றத்தின் அடுத்த நகர்வு குறித்து கலந்துரையாடினேன்.
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை எம்மிடம் இருந்த போதும், ராஜபக்ச அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையினை ஏற்றுக் கொண்டு அவருக்கு தேவையான வகையில் அரசாங்கத்தினை கொண்டு நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.
நான் ஜனநாயகத்தினை வரவேற்கிறேன். ஜனநாயகத்தினை மதிக்கின்றேன். ஜனநாயக ரீதியாக நடந்து வருகின்றேன். அதனடிப்படையில் புதிய ஜனாதிபதிக்கு அரசாங்கத்தினை கொண்டு செல்வதற்காக நான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளேன். இது தொடர்பில் நாளை (21) நான் கடிதம் மூலம் உத்தியோகபூர்வபாக ஜனாதிபதிக்கு அறிவிக்க உள்ளேன்.
பிரதமராக செயற்பட்ட காலத்தில் எனக்கு பாராட்டுகளை போலவே மோசமான விமர்சனங்களும் கிடைத்துள்ளன. நல்லதும் கெட்டதும் கேட்க கிடைத்தது.
என்னை பாராட்டிய, தூற்றிய, நல்லதைக் கூறிய, தீயதை கூறிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனது பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துரையிடுக

 
Top