மீறினால் கடும் தண்டனை
ஐரோ. கண்காணிப்பாளர்களும் வருகை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் யாவும் நாளை(13) நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நாளை நள்ளிரவுக்குப் பின்னர் பிரசாரங்களை முன்னெடுப்பது மற்றும் வீடுகளுக்குச் சென்று பிரசாரங்களை மேற்கொள்வது என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். எதிர்வரும் சனிக்கிழமை காலை ஆரம்பமாகவுள்ள ஜனாதிபதி தேர்தலையொட்டி 14 ஆம் , 15 ஆம் திகதிகளில்
நாட்டில் அமைதி பேணப்படும் அதேநேரம் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சுயமாக தீர்மானிப்பதற்குரிய காலமாக இக்காலப்பகுதி இருக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
இவற்றை மீறி இக்காலப்பகுதியில் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவோர் மற்றும் விளம்பரங்களை ஔி, ஒலிபரப்புச் செய்யும் ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படுமென்றும் தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவர் கூறினார். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இம்முறை வாக்குச் சீட்டு 2.1 அடி அதாவது 66 சென்ரிமீற்றர் நீளமானது என்றும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் 17 பேர் கொண்ட சர்வதேச கண்காணிப்பு குழுவினர் இன்றும் நாளையும் இலங்கையை வந்தடைவர் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் இலங்கைக்கு வருகை தருவதாகவும் அந்த கண்காணிப்புக் குழுவில் இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, தென் ஆபிரிக்கா, மாலைதீவு, பூட்டான், பிலிப்பைன்ஸ் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top