பதின்மூன்று வயது மகளை மண்ணெண்ணெயூற்றி  எரித்து  கொலை செய்த குற்றச்சாட்டில் நீதி மன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தலைமறைவாகி இருந்த விசாரணைக் கைதியான நற்பிட்டிமுனையை சேர்ந்த  பெண்  ஒருவர் 14 வருடங்களுக்குப் பின்னர் கல்முனை  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . 

கடந்த 2004.03.12 ஆம் திகதி நற்பிட்டிமுனை -03 மையவாடி வீதி இலக்கம் 354 இல் வசித்து வந்த 13 வயதுடைய ஜமால்தீன் சித்தி முபீனா என்ற சிறுமி அவரது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பான   சந்தேக நபர் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்முனை உயர் நீதி மன்றில்  ஆஜர் செய்யப்பட்டு  பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில்  அதன் பின்னர்  நீதி மன்றில் நடைபெற்ற எந்தவொரு வழக்கு விசாரணைக்கும்  சமூகம் கொடுக்காமல் இருந்த காரணத்தால்  நீதிமன்றம் குற்றவாளியான  சந்தேக நபருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது .

குறித்த சந்தேக நபருக்கு  எதிராக சந்தேக நபர்  இல்லாமலேயே வழக்கு விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த குற்றவாளியான மேற்குறிப்பிட்ட நற்பிட்டிமுனை முகவரியில் வசித்து வந்த  50வயதான பெண்  கல்முனை  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்முனை உயர் நீதி மன்றில் ஒப்படைக்கப்படுள்ளார் .

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது ஆயுள் தண்டனைக்குட்படுத்தப்பட்டு விசாரணைக்கைதியான குறித்த பெண் போலி முகவரியுடனான ஆள் அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டுக்களை  பயன்படுத்தியுள்ளமையும்   சம்மாந்துறை நபர் ஒருவருடன் பொலநறுவை நவசேனபுர பிரதேசத்தில் வாழ்ந்து வருவதாகவும்  . இதனிடையே கடந்த 10 வருடமாக சவூதி அரேபியாவுக்கு சென்று 03 தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளாதாக  விசாரணை மேற்கொண்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

இந்த சிறுமியின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபரான குழந்தையின் தாய்  கடந்த திங்கட் கிழமை (10.12.2018) பொலநறுவை நவசேனபுர எனுமிடத்தில் வைத்து  கல்முனை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார் .

கல்முனை பொலிஸாரின் நீண்டகால விசாரணையை தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலநறுவை நவசேனபுர  கிராமத்துக்கு சென்ற கல்முனை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான பொலிஸ் சார்ஜன் ஆர்.எம்.கே.ரத்நாயக்க (23938) ,எம்.லத்தீப் (46744) , பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஆர். ரூபினி (6114) ஆகியோரால்  ஆயுள் தண்டனைக் கைதியான நற்பிட்டிமுனையை சேர்ந்த ஆதம்கண்டு அச்சும்மா  என்பவர் 14 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு நேற்று (11) கல்முனை உயர் நீதி மன்றில் ஒப்படைக்கப்பட்டார் . 

கருத்துரையிடுக

 
Top