கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் -ஜலீல் 

மனித நேயத்தை  தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கின்ற நிலையில்  அந்த மனித நேயத்தையும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கையும் மாற்றுத்திறனாளிகள் கொண்டிருக்கின்றனர் . நல்ல நிலையில் உள்ளவர்களை விடவும் மாற்றுத்திறனாளிகளிடம் மற்றவருக்கு உதவும் தன்மை அதிகம் காணப்படுகின்றது .

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட விசேட கல்விப் பிரிவு  மாணவர்கள் கலந்து கொண்ட சர்வதேச மாற்று வலுவுடையோர் தின விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று  திங்கட் கிழமை(03) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடை பெற்றது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்முனை வலயக்  கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மாற்று வலுவுடையவர்களின் ஆற்றல்கள் அவர்களது உணர்வுகள் மற்றவர்களால் மதிக்கப்படவேண்டும்  மாற்று வலுவுடையவர்கள் இன்று சாதனை வீரர்களாக வெளிக்காட்டப்படுகின்ற போது  பெற்றோர்கள் மாற்றுத்திறன் உள்ள பிள்ளைகளின் ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்த பின் நிற்காது அவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கின்ற போதுதான்   அவர்களும் எதிர்காலத்தில் சாதித்துக் காட்டுவார்கள்  இந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்காக கல்வி அமைச்சு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது  இந்த மாணவர்கள் விடயத்தில் கல்முனை கல்வி வலயம் கூடுதல் கரிசனை கொண்டுள்ளது  நல்ல நிலையில் இருக்கின்ற எமது பிள்ளைகளை பராமரிக்க முடியாத நிலையில் இருக்கின்ற பெற்றோர்கள் மத்தியில் மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைகளை பராமரித்து அவர்களை வழிப்படுத்துகின்ற ஆசிரியர்கள் உண்மையாகவே பாராட்டப்பட வேண்டியவர்கள் இந்த மாணவர்கள் மீது அக்கறை கொண்டதன் காரணமாக இவர்களுக்கான விசேட பயிற்சிகள் வழங்குவதற்காக  ஜப்பான் நாட்டைசேர்ந்த தொண்டர் ஒருவரை எமது கல்முனை கல்வி வலயத்துக்கு பெற்றிருக்கின்றோம்.

  எனவே பெற்றோர்கள் இவ்வாறான பிள்ளைகளை சுமை என்று கருதாது அவர்களும் மனிதர்களே என்ற அடிப்படையில் அவர்களுக்கான கல்வியை வழங்க வெளியே கொண்டு வாருங்கள் என்றார் 

கல்முனை வலயக் கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜிஹானா அலிஃப் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள விசேட கல்விப் பிரிவு  உள்ள 06 பாடசாலைகளின் மாணவர்களும் அவர்களது பெற்றார்களும் அதிபர் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

சர்வதேச மாற்று வலுவுடையோர் தின விழாவில் கலந்து கொண்ட மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான கலை நிகழ்வுகள் இடம் பெற்றது அம்மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் , விசேட கல்விப்  பிரிவுக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.ஷியாம் ,கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர் வீ.பிரபாகரன் , மாற்று வலுவுடைய மாணவர்களுக்கு பயிற்றுவிப்பாளராக பணியாற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த செல்வி சியோரி யொசிக்கோ ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top