முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள்  (சுயேட்சைக்குழு) 2வர்  ஆதரவு  6பேர் வெளிநடப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கலந்து கொண்ட 12 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற விஷேட சபை அமர்வில் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியினால் சமர்ப்பிக்கப்பட்டது. 

இவ்வரவு செலவுத் திட்டமானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பிரதேச மக்களதும் தேவைகளை முன்னுரிமைப்படுத்தியதான விஷேட வேலைத்திட்டங்கள் அடங்கி வரவு செலவுத்திட்டம் என்பதை ஏற்றுக் கொண்டு பிரதேச சபையின் உறுப்பினர்கள் 12 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

இதில் ஆளும் கட்சி உறுப்பினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஏழு பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக தலா ஒருவர் வீதம் பத்து பேரும், எதிர்கட்சி உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் (சுயேட்சைக்குழு) உறுப்பினர்களாக திருமதி.ஜெஸீமா, திருமதி.மாஜிதா ஆகியோரின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் (சுயேட்சைக்குழு) உறுப்பினர்களான எம்.ரீ.எம்.அன்வர், எம்.ஐ.ஹமீட் லெப்பை, எம்.ஜி.அஸீஸ் றஹீம், ஐ.எல்.பதுர்தீன், எம்.எம்.எம்.ஹனீபா, எஸ்.ஏ.அன்வர் ஆகிய ஆறு பேரும் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பொது நிர்வாகம், சுகாதார சேவை, பௌதீகத் திட்டமிடல், பொதுப்பயன்பாட்டுச் சேவை, குடிநீர் விநியோகம், நலன்புரிச்சேவை என்பற்றுக்கான நிதியொதுக்கீட்டுடன் விஷேட வேலைத்திட்டங்கள் அடங்கியதாக உறுப்பினர்களது முன்மொழிவுகள் பெறப்பட்டு இவ்வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். 

உயதமாகும் 2019ஆம் ஆண்டானது இப்பிரதேச மக்களுக்கு சிறந்ததாகவும் அபிவிருத்தி நிறைந்த ஆண்டாக மலர வேண்டுமென்பதும் ஓட்டமாவடி பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகளது எதிர்பார்ப்பாகும். 

ஓட்டமாவடி பிரதேச மக்களது தேவைகள், பிரதேச அபிவிருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சபையின் வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கிய அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் விசேடமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் (சுயேட்சைக்குழு) உறுப்பினர்களாக திருமதி.ஜெஸீமா, திருமதி.மாஜிதா ஆகியோருக்கும் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். 


கருத்துரையிடுக

 
Top