மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று (30) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகிய பொலிஸ் கான்ஸ்டபில் இருவரே உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு வவுணதீவிலுள்ள பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும்  கடமையில் ஈடுபட்டிருந்த வேளை,  அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே இவ்விரு பொலிசாரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
T56 ரக துப்பாக்கிகளினால் குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளனர்.
குறித்த பகுதிக்கு சென்றுள்ள கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வி இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த சடலங்களை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் உத்தரவிட்டார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மா அதிபரின் பணிப்பிற்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் (CID) பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த  பொலிசாரில் தினேஷ் பெரிய நீலாவணைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பிரசன்னா என்பவர் காலியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

கருத்துரையிடுக

 
Top