வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் உருவான கஜா சூறாவளி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 

இந்தச் சூறாவளி இன்று பிற்பகல் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகிறது. இது இன்றிரவு கரையிலிருந்து 100 கிலோ மீற்றர்வரை அண்மிக்கக்கூடும். இதன் காரணமாக வடமாகாணத்தில் அடைமழை பெய்து கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

கஜா சூறாவளியின் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை - மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களை நாட வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 

சில சமயங்களில் மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழலாம். இது குறித்து அவதானம் தேவை. தொலைபேசி ஊடாக அவசர உதவிகளைப் பெறலாம் இதற்காக அழைக்க வேண்டிய இலக்கம் 117 என்பதாகும் என திரு.கொடிப்பிலி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top