*மக்கள் ஆணையே உன்னதமானது
*புத்திஜீவிகள், கல்விமான்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள் கருத்து
நாட்டின் தற்போதைய மோசமான அரசியல் நிலைமைக்கு பொதுத் தேர்தல் மூலமே நிரந்தரமான தீர்வொன்றைக் காணமுடியுமென பௌத்த தேரர்களும் புத்திஜீவிகளும் தெரிவிக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் தற்போது உக்கிரமடைந்துள்ள நிலைமைகளுக்கு சபாநாயகரே பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவிக்கும் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் சர்வதேசத்தின் முன்னிலையில் நாட்டை அபகீர்த்திக்குள்ளாக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசியல் ரீதியாக நாட்டில் உருவாகியுள்ள மோசமான நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நாட்டு மக்களின் விருப்பப்படி மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு தேர்தலுக்கு செல்லவேண்டியது அவசியமென பௌத்த தேரர்கள் உட்பட நாட்டின் கல்விமான்கள், புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். எந்தவொரு நாட்டிலும் மிக உன்னதமானது மக்களின் ஆணையே எனத் தெரிவிக்கும் அவர்கள் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து, அவர்கள் விரும்பும் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இடமளிப்பது அவசியமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு முக்கிய காரணம் சபாநாயகரே என குறிப்பிட்டுள்ள அவர்கள், சபாநாயகரின் செயற்பாடுகளால் எமது நாடு ஸ்திரமற்ற நாடு என உலகத்துக்குக் காட்டுவதே அவர்களின் நோக்கமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உன்னதமான பாராளுமன்றத்தின் கௌரவம் முற்றாக அழிக்கப்பட்டதற்கான பொறுப்பை தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவதே ஜனாதிபதி தற்போது மேற்கொள்ளவேண்டிய முக்கியமான செயற்பாடாகும் என தேசப்பற்று பிக்குகள் முன்னணியின் செயலாளரும் தேசிய உரிமைகள் அமைப்பின் தலைவருமான வெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு அரசியலமைப்பு கறுப்பா? வெள்ளையா? என்பது பற்றிய கவலையில்லை. அந்த மக்களுக்கு தற்போது தேவையெல்லாம் பொதுத் தேர்தலே. மக்கள் ஆணைக்கும் நீதிமன்றத்திற்கும் கௌரவமளிப்பதானால் உடனடியாக பாராளுமன்றத்தின் தலைகள் மீது நம்பிக்கை வைக்காமல் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் தமக்கு விருப்பமான அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும். என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தற்போது நிலவும் மோசமான நிலைமைக்கு முக்கிய காரணம் சபாநாயகரே. அவர் அரசியலமைப்பை மீறி செயற்படுகின்றார் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் நாட்டின் 21 மில்லியன் மக்களின் ஜனநாயக உரிமைக்கு தீர்ப்புகூற முடியாது. அதற்கான உரிமையை மக்களிடமே வழங்கவேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைக் கருத்திற்கொண்டு, மக்கள் எதிர்பார்ப்பை பாதுகாக்கும் வகையில் பொதுத் தேர்தலுக்கு இடமளிக்க வேண்டும். இதற்கிணங்க மக்களின் கருத்தை அறிவதற்கு அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
உண்மையைக் கண்டறியும் அமைப்பின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி பிரேமநாத் சீ தொலவத்த இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், நாடு தற்போது ஸ்திரமற்ற நிலையிலுள்ளது. நாட்டை அதிலிருந்து மீட்டு முன்னேற்றுவதற்கு பொதுத் தேர்தலே தீர்வாக அமைய முடியும். பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அதுவரை பொறுத்திருக்க முடியாத ஐக்கிய தேசியக் கட்சியினரும் சபாநாயகரும் நாட்டை ஸ்திரமற்றதாக சர்வதேசத்துக்குக் காட்டும் முயற்சிகளிலேயே ஈடுபட்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மாலக்க ரணதிலக இதுபற்றி கருத்துத்தெரிவிக்கையில், நாட்டின் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்யும் உரிமை நாட்டு மக்களுக்கே உள்ளது. பாராளுமன்றத்திற்குள் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளாமல் மக்களின் எதிர்பார்ப்புக்கு இடமளிப்பது அவசியமாகும். அவ்வாறு செயற்பட்டால் சர்வதேச ரீதியில் அபகீர்த்திக்குள்ளாகியுள்ள நாட்டை அதிலிருந்து மீட்க முடியும். நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார, கலாசார மற்றும் சமூக சீர்கேடுகளை களைவதற்காக சில மாதங்களுக்கு முன் மக்கள் அதனை நிராகரித்தனர். அதனால் பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு மேற்படி கட்சியினர் பயப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். TKN

கருத்துரையிடுக

 
Top