( யூ.எம்.இஸ்ஹாக்)

  கல்முனை பாண்டிருப்பில் வாழ்ந்து கொண்டு கல்விப்பணியுடன் கலைப்பணியும் ஆற்றி வரும் பைந்தமிழ்க்குமரன் டேவிட் அதிபர்  அவர்கள் படைத்த அக்கினி யாத்திரை நாடகத்தை கடந்த 30.09.2018 ஞாயிறு திருஇருதயநாதர்  அரங்கிலே சுவைக்கக் கிடைத்தது. கிறீஸ்த்தவ விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட நாடுதழுவிய நாடகப்போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்த நாடகம் இது. அண்மையில் தலைநகர்  கொழும்பு டவர்  அரங்கில் அதற்கான பரிசளிப்பு நிகழ்வு  சுற்றலாத்தறை அபிவிருத்தி மற்றும் கிறீஸ்த்தவ மத அலுவல்கள் அமைச்சரின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேசிய ரீதியில் முதலாம் இடத்தை இந்த நாடகம் பெற்றதுடன் சிறந்த நாடகப்பிரதி, சிறந்த நெறியாள்கை, சிறந்த இசையமைப்பு, சிறந்த நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம் எனும் சிறப்பு  விருதுகளையூம் தட்டிக் nடிகாண்டது. அத்துடன் அருட்தந்தை ஏ.ஜேசுதாசன் அடிகளாருக்கு சிறந்த இணைப்பாளர் வழிகாட்டிக்கான  சிறப்பு விருதும் கிடைத்தது.

     அக்கினி யாத்திரை நாடகத்தை எழுதி பயிற்றுவித்து நெறியாள்கை ஒப்பனை அரங்க முகாமைத்துவம் செய்து மேடையளிக்கை செய்தவர்  இலங்கையின் பெயர் பெற்ற எழுத்தாளர் , கவிஞர் , நாடகச்சிற்பி பைந்தமிழ்க்குமரன் டேவிட் அதிபர்  ஆவார் .

இந்த மண்ணிலே புரையோடிப்போயுள்ள பன்முக அவலங்களையும் அவற்றின் பின்புலங்களையும் தோலுரித்துக்காட்டியது அக்கினி யாத்திரை நாடகம். ஏழைகள் கூலிகள் பாமரர்களாக வாழும் பல்லினத்தவர்கள் ஒன்றுபட்டால் நாம் பட்டு மெத்தையில் சுகம் அனுபவிக்க முடியாது என்று சுயநலப் பெருச்சாளிகளாய் வாழும் சமூகப்போலிகளை புறந்தள்ளி தம்மிடையே மண்டிக்கிடக்கும் சுயநலம் மதவாதம் பிரதேசவாதம் போன்ற தீய பண்புகளை தீயிலிட்டு எரித்து ஒன்றுபட்டு ஒரே சக்தியாக மக்கள் வெளிக்கிளம்பும் வேளை அவர்களை ஆற்றுப்படுத்திய அருட்சகோதரர்  தாக்கப்பட்டு ரத்தம் சிந்தி உயிர் துறக்கின்றார் . அப்போ மக்கள் உணர்வுடன் வீறுகொண்டெழுந்து தமக்காக உயிர் நீத்த துறவியின் அடிச்சுவட்டில் தாமும் நடப்போம் என உறுதி பூண்டு நிற்கும் காட்சியுடன் திரை விழுகின்றது.

     வினாடிக்குவினாடி விறுவிறுப்புடன்கூடிய அவாநிலையில் பார்வையாளரை கட்டி வைத்து விடுகின்றது அக்கினி யாத்திரை நாடகம். எப்போற்ப்பட்ட உறுதியானவர்களையும்கூட உருக வைத்து சில துளி கண்ணீரை சிந்த வைத்து விடும் சிறந்ததொரு நாடகமாக இதனைப் பதிவு  செய்யலாம். தேவையற்ற அசைவுகள் வார்த்தையாடல்கள் எதுவுமின்றி களநிலைக்கேற்ற பின்னணி இசை தவழ பொருத்தமான பாத்திர ஒப்பனையும் ஒளிவிதானிப்பும் நாடக வெற்றிக்கு பெரிதும் உதவுகின்றன. நாடக பிரம்மா பைந்தமிழ்க்குமரனின் குரலில் ஓங்கி ஒலிக்கும் ஆரம்பக்குரலும் வாழ்க்கையை போர்க்களமாக சித்தரிக்கும் ஆரம்ப வரிகளும், மாறுபடும் காட்சிப்பின்னலும் இரசிகர்களை சுண்டியிழுத்து சுவைக்க வைக்கின்றன. பாத்திரங்களுடன் ஒன்றித்து தமது திறமையை வெளிப்படுத்தும் நடிகர்கள் மற்றும் பாத்திரப் பொருத்தம் என்பவை நம்மை மெய்சிலிக்க வைக்கின்றன.

     இன்றைய தொடர்பூடக உலகில் மேடைநாடகங்களின் சுவை  குறைந்து அருகிவருகின்றதே என ஆதங்கப்படும் நாடக ஆர்வலர்களை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்துவிடுகிறார்  பைந்தமிழ்க்குமரன் டேவிட் அவர்கள். ஒட்டு மொத்தமாக கூறுவதானால்  கிறிஸ்த்தவ விவகார அமைச்சின் மிகச்சிறந்த தெரிவு  அக்கினி யாத்திரை நாடகம் என்று கூறலாம். முன்னராக அருட்தந்தை ஏ.ஜேசுதாசனின்  உதவியுடன் ‘தாகமாயிருக்கிறேன’ எனும் மகுடத்தில் யேசுபெருமானின் திருப்பாடுகளின் காட்சியை சுமார்  மூன்று மணித்தியாலங்களுக்குமேல் ஐம்பதுக்கு மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு வழங்கியிருந்தார்  என்பது குறிப்பிடவேண்டியதாகும்.

கருத்துரையிடுக

 
Top