2018 ஆண்டுக்கான கிழக்கு மாகாண உயர் விருதான வித்தகர் விருது மற்றும் அரச உயர் விருதான கலாபூஷண விருதுகளைப் பெறும் மருதமுனையைச் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜனாப் பீர்முகம்மது முகைதீன் அப்துல் காதர் (பி.எம்.எம்.ஏ.காதர்)1957ஆம் ஆண்டு மார்கழி மாதம் 27ஆம் திகதி பிறந்தார்.
இவர் 30 வருடங்களாக ஊடக மற்றும் இலக்கியப் பணியில் ஈடுபட்டு கவிதை,கட்டுரை,விமர்சனம்,உள்ளீட்ட பல்வேறு படைப்புக்களை சமூக மேம்பாட்டுக்கா எழுதி வெளியிட்டு வருகின்றார்.
இவர்1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'அன்னை' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி அக்கவிதை மித்திரன் வாரமலர் பத்திரிகையில் பிரசுரமானது முதல் எழுத்துலகில் பிரவேசித்தார்.
அன்று முதல் இன்று வரை இலங்கையில் வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிகைகளுக்கும் பிராந்திய செய்தியாளராக் கடமையாற்றுகின்றார்.
இவற்றுடன் பதினைந்துக்கும் மேற்பட்ட இணையத்தளங்களுக்கும் செய்தியாளராக் கடமையாற்றுவதுடன் மருதமுனை ஒண்லையின் இணையத் தளத்தின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிகின்றார்.
மர்ஹூம் எம்.பி.எம்.அஸ்ஹர் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட எழுச்சிக்குரல் பத்திரிகையில் செய்தி எழுத ஆரம்பித்து தினமணி, நவமணி, தினகரன், தினகரன் வார மஞ்சரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுடர் ஒளி, ஞாயிறு சுடர் ஒளி, தினக்கதிர், சத்தியம், தினக்குரல், ஞாயிறு தினக்குரல், மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, வீரகேசரி, வீரகேசரி வார வெளியீடு, தமிழ்த்தந்தி, எங்கள் தேசம், முஸ்லிம் முரசு, தமிழ் மிரர், விஜய் உள்ளிட்ட வெளிவந்து மறைந்த இன்னும் சில பத்திரிகைகளுக்கும் இவர் செய்தியாளராகக் கடமையாற்றி இன்;று வரை தொடர் பணிபுரிகின்றார்.
இதுவரை இவர் ஐநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும்,இருநூற்று ஐம்பதுக் கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2010ஆம் ஆண்டில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் ஆர்.பாரதி அவர்களின் வழிகாட்லில் வெளிவந்த 'கிழக்கின் குரல்' பகுதியில் மட்டக்களப்பு கிளையின் முகாமையாளராகவும்,ஆசிரிய பீடத்தின் இணைப்பாளராகவும் பணியாற்றிய பே.ஜயகணநாதன் (ஜனா) அவர்களின் நெறிப்படுத்தலில் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் 53 கட்டுரைகளை எழுதியவர்.
மெட்ரோ நியூஸ், வீரகேசரி வார வெளியீடு ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக இருந்த வி.தேவராஜ் அவர்களின் வழிகாட்டலில் இணை ஆசிரியராக பணிபுரிந்த சூரன் ஏ.ரவிவர்மா அவர்களின் நெறிப்படுத்தலில் 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை 'விலேஜ் விசிட்' என்ற தலைப்பில் தொடர்ச்சியாக 125 வாரங்கள் கட்டுரைகளை எழுதி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றுடன் தினகரன், தினகரன் வார மஞ்சரி, வீரகேசரி, வீரகேசரி வார வெளியீடு, விடிவெள்ளி, நவமணி, சுடர் ஒளி, தமிழ்த்தந்தி, முஸ்லிம் முரசு உள்ளீட்ட பல பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும், பத்திரிகை ஆசிரியர் சங்கமும் நடாத்திய போட்டியில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த பத்திரிகையாளருக்கான சுப்ரமணிய செட்டியார் தேசிய விருதை வென்ற முதல் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை இவரையே சாரும்.
அதேபோன்று 2012ஆம் ஆண்டு இங்கை பத்திரிகை ஸ்தாபனமும், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் 'விலேஜ் விசிட்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான தேசிய விருதுதையும் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருதமுனைக் கிராமத்தின் தொழில் வளம்,பௌதீக வளம்,கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களிலும், அம்பாரை,மட்டக்களப்பு,திருகோணமலை,அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய பிரதேச மக்கள் எதிர்நோக்கிய பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் கட்டுரை வாயிலாக வெளிக்கொண்டு வந்ததுடன் அரசியல் தொடர்பிலும் இவரது எழுத்துப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் தனது உறைவிடம், உடமைகள் ,ஊடக உபகணங்கள்,சேமித்து வைத்திருந்த 276 கட்டுரைகள், 223 கவிதைகள் மற்றும் ஆக்கங்கள் அனைத்ததையும் இழந்த போதிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் மருதமுனை மண்ணின் பாதிப்புக்களை ஆவணப்படுத்திய பெருமை இவரயே சாரும் பாதிக்கப்பட்ட நிலையிலும் மனம் தளராத தனது ஊடகப்பணியை முன்னெடுத்தவர்.
இன. மத வெறுபாடின்றி எல்லா இன மக்களும் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும், மிகவும் பின்தங்கிய நிலையில் மக்கள் வாழும் பிரதேசங்களின் குறைபாடுகளையும் கட்டுரை வாயிலாக ஊடகங்கள் உடாக வெளிக்கொண்டு வந்தவர் பக்கம் சாராமல் உண்மையின் பக்கம் நின்று உறுதியோடு எழுதியவர் இன்று வரை எழுதிக் கொண்டிருப்பவர்.
இலங்கையின் முக்கிய ஊடக அமைப்புக்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஆகியவற்றின் சிரேஷ்ட உறுப்பினருமாவார்; இவர் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளராகவும்,பொருளாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தில் (சதொச) 1994ஆம் ஆண்டு விற்பனை உதவியாளராக கடமையாற்றி 2005ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எம்.எல். துல்கர் நயீம் (துல்சான்) அவர்களுடன் இரண்டு வருடங்கள் ஊடக இணைப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த மர்ஹூம் பத்துமுகம்மது ராவுத்தர் பீர்முகம்மது மருதமுனையைச் சேர்ந்த இஸ்மாலெப்பை ஆமினா உம்மா தம்பதியின் இரண்டாவது புதல்வராவார்.
-MIM.Valeeth

கருத்துரையிடுக

 
Top