(அகமட் எஸ். முகைடீன்)

இந்நாட்டின் தேசிய நலனுக்காக பெரும் பங்காற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க கோரும் மகஜர் ஒன்றை பிரதி அமைச்சர் ஹரீஸ் இன்று (20) வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று முந்தினம் (18) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் மேற்படி கோரிக்கைக்கான வேண்டுகோளை தனது உரையின்போது விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தில் விடுத்த அவ்வேண்டுகோளை செயலுருப்படுத்தும்வகையில் சபாநாயகர் கரு ஜயசூரியவை பாரளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து மேற்குறித்த மகஜரை கையளித்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஒரு கிங் மேக்கராக இருந்த அஷ்ரஃப் அவர்களின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.       

கருத்துரையிடுக

 
Top