(அகமட் எஸ். முகைடீன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (10) வியாழக்கிழமை கொழும்பு உலக வரத்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 36வது தளத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவவிதாரண உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் பல பிரமுகர்களும்  கலந்துகொண்டனர்.

அண்மையில் நடைபெற்ற பகுதியளவிலான அமைச்சர், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் மாற்றத்தின்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகவிருந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்திருந்தாhர். அதற்கமைவாக அவ்வமைச்சுப் பொறுப்புக்களை பாரமெடுக்கும் மேற்படி நிகழ்வு நடைபெற்றது. 

இதன்போது கொழும்பு 1, செத்தம் வீதியில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் இமாம் எம். இக்பால் மௌலவியினால் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது. 

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அரச ஈட்டு முதலீட்டு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம், லங்கா புத்ர அபிவிருத்தி வங்கி, இலங்கை சேமிப்பு வங்கி, ஸ்ரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா தனியார் கம்பனி, ஹோட்டல் டிவலப்பர்ஸ் தனியார் கம்பனி, மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்ட கம்பனி, வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்ட கம்பனி, வரையறுக்கப்பட்ட சிலாபம் பெருந்தோட்ட கம்பனி, வரையறுக்கப்பட்ட கல்ஓயா பெருந்தோட்ட கம்பனி, இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம், மாநில வள மேலாண்மை கழகம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 
கருத்துரையிடுக

 
Top