கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதியினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூட்டப்பட்டிருந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கலவர சூழலை ஏற்படுத்த காரணமானவர்களையும் கலவரங்களில் ஈடுபட்டவர்களையும் கைதுசெய்து அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தான் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடர் இடம்பெறும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் செயற்பட்டுவருவது அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கடந்த மூன்று வருட காலமாக நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்பை செய்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்காலத்திலும் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, சட்டமும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top