கண்டி – திகன பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து நடுநிலையானதும், சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு சிறப்பு வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேபோல் ஏற்படக்கூடிய நிலைமைகளை தடுப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினரை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது
கண்டி, திகன நகரில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியின் திகன பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளை காலை 6.00 மணி வரையில் கண்டி மாவட்டத்திற்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top