சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.எ.காதர்
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்து கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது.இதன் தாக்கம் பரீட்சைப் பெறுபேறுகளிலும் ஆதிக்கம் செலுத்துதை நாம் காண்கின்றோம்.ஒருவரிடம் வாசிப்பு இல்லையென்றால் அவர் சமூக அந்தஸ்தைப் பெறமுடியாது. வாசிப்பை நேசித்தால்தான் சமூகம் நம்மை நேசிக்கும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் அதிபர் பி.எம்.எம்.பதுறுத்தீன் தலைமையில் நேற்று(06-11-2017)திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்வில் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது- இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.2004ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நாடு முழுவதும் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பல்கலைக் கழகங்கள், கல்விக் கல்லூரிகள், பாடசாலைகள்,உள்ளுராட்சி மன்றங்கள் நூலகங்கள் உள்ளீட்ட பல்துறைசார்ந்த பொது ஸ்தாபனங்களும் தனியார் துறையினரும் இந்த வாசிப்பு மாதத்தைக் கொண்டாடிவருகின்றனர்.
இந்த தேசிய வாசிப்பு மாதத்திலே வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், சுட்டிக்காட்டும் வகையிலும் பதாதைகள் தொங்க விடப்பட்டு மாணவர்கள் மத்தியில் போட்டிகளும் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும் மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. பண்டைய காலத்திலே எழுத்துக்களை களிமண் தகடுகளில் எழுதி சூளையில் வைத்து சுட்டு பாதுகாத்து வாசித்து வந்திருக்கின்றார்கள். அதே போன்று கல் மலைகளிலே செதுக்கிவைத்தும், பனையோலைகளில் எழுதி ஏடுகலாக்கி பாதுகாத்தும் வாசித்து வந்திருக்கின்றார்கள்.

ஆனால் இன்றை நவீன யுகத்திலே வாசிப்பு என்பது பத்திரிகைகளாகவும்,புத்தகங்களாகவும்,இணையத்தளங்களாகவும்,வட்சப்களாகவும்.ஐ.எம்.ஓ.களாகவும், வைபர்களாகவும்,முகநூலாகவும்   நவீன வடிவம் பெற்றிருக்கின்றது ஆனாலும் வாசிப்பு என்பது அருகிக் கொண்டே வருகின்றது ஆகவே வாசிப்பை நேசிக்காவிட்டால் நம்மை யாரும் நேசிக்கமாட்டார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கு பார்த்தாலும் நூலகங்கள் உறங்கு நிலையில் வெறிசோடிக்கிடக்கின்றன, வாசிப்பதற்கு யாருமில்லாமல்  நூல்கள் தூசுபடிந்து கிடக்கின்றன.அரசாங்கம் பெருந் தொகையான பணத்தைச் செலவு செய்து நூல்களையும், பத்திரிகைகளையும், ஆளணிகளையும் வழங்கி வருகின்ற போதிலும் வாசிப்பதற்கு யாருமில்லை வாசிக்க வேண்டி எத்தனையோ விடையங்கள் தேங்கிக்கிடக்கின்றன.வாசிக்காமல் இருப்பதனால் வண்முறைகளும்,வாய்ச் சண்டைகளும் அதிகரித்து இனவாதமும், மதவாதமும், பிரதேசவாதம் மேலோங்கி நிற்கின்றது.
வாசித்தல் என்பது எழுதப்பட்ட உரையின் எழுத்துக்களை பார்த்துசொற்களைப் புரிந்து,அதில் கூறப்பட்ட கருத்தை உணர்ந்து கொள்வதை வாசித்தல் என்று சொல்லலாம். வாசித்தல்  எழுத்தறிவின் ஒரு அடிப்படைக் கூறுஇன்றைய அன்றாட வாழ்க்கைக்கு வாசித்தல் அவசியமானது.கையெழுத்தில் அல்லது அச்செழுத்தில் உள்ளதைக் கண்களால் கண்டு வாயால் உச்சரித்து சொல்லின் பொருளை உணர்ந்த கொள்வதையும் வாசிப்பு அல்லது படிப்பு என்று சொல்ல முடியும்.

வாசிப்பின் செயல்பாட்டினைக் காணும் போது கண்ணுக்கும் வாய்க்கும் ஓர் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. அதாவது வரிவடிவத்திலுள்ள சொற்களை ஒலி வடிவமாக மாற்றி உச்சரிக்கும் உறுப்புகளும், சொற்களை நோக்கும் கண்களும் ஒத்துழைத்தால்தான் வாசிப்பு சரிவர நடைபெறும். ஆகவே, வாசிப்பானது காணல், உச்சரித்தல், பொருளுணர்தல் என்ற மூவகை கூறுகள் அடங்கியுள்ளது.மேலும், நல்ல வாசிப்பிற்கு எழுத்துகளின் ஆளுமை முதற்கூறாக அமைந்தால் அது கருத்துணர்வாக அமையும்.
எனவே ஒவ்வொரு  மனிதனும் வாசிக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கின்றது ஆசிரியர்களாக இருந்தாலும், மாணவர்களாக இருந்தாலும் வாசிக்க வேண்டும் வாசிக்காத ஆசிரியர்களால்  கற்பிக்க முடியாது வாசிக்காத மாணவர்களால் கற்றுக் கொள்ள  முடியாது எனவே எல்லோம் வாசிப்புக்கு நேரத்தை ஒதுக்கி வாசிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சமூக சேவையாளர் ஏ.அப்துல் ஹமீட் பாடசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அதிபர் பி.எம்.எம்.பதுறுத்தீன்.,நூலகத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் எஸ்.எம்.எம்.அபூபக்கர்(நஜீம்) ஆகியோரிடம் கையளித்தார். அதிதிகளும்அ,திபரும் மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.

கருத்துரையிடுக

 
Top