(ஆர்.ஹஸன்)
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் இன்று சனிக்கிழமை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து முதலீடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். 
சவூதி இளவரசர் தலைமையிலான தூதுக்குழுவுடன் இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷெ;ய்யித் மசூர் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர். 
இதன்போது, இலங்கையின் சுற்றுலாத்துறை, நகர அபிவிருத்தி, கட்டிட நிர்மாணம் மற்றும் வீடமைப்பு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர் மட்டத்துடனான பேச்சுக்களை எவ்வாறு மேற்கொள்ளவது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டன. 
இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சவூதி தூதுக்குழு அங்கு முதலீடு செய்யவுள்ள பகுதிகளுக்கு கள விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

 
Top