முன்னைய அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் தவறிழைப்பதாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கமும் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக 22 மோசமான சம்பவங்கள்  இடம்பெற்றுள்ள போதும் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள 4 பொலிஸ் குழுக்களும் புலனாய்வுப் பிரிவினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையும் அதேவேளை வெட்கப்பட வேண்டிய விடயமுமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று தினேஷ் குணவர்தன எம்.பி. முன்வைத்த ஜெனீவா பிரேரணைக்கு எதிரான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்களுக்கு எதிராக 22 சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸ் குழுக்களும் புலனாய்வுப் பிரிவினரும் என்ன செய்கின்றார்கள்? என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் இது ஒரு வெட்கப்பட வேண்டிய விடயம் என்றும் தெரிவித்தார்.
ஒரு மத குருவும் குண்டர்களடங்கிய குழுவும் சேர்ந்து முஸ்லிம் மதத்தை அவமதித்து அல்லாவையும், நபிகளாரையும் தூஷித்து முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள போது அதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஒருவரையேனும் இது தொடர்பில் கைது செய்யாமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
மத குருவைக் கைதுசெய்து தண்டனை வழங்க வேண்டும் என்பது எமது நோக்கமல்ல சுதந்திரமடைந்த இந்த நாட்டில் அனைத்து மக்களும் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய நிலை வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
முஸ்லிம் மக்கள் சமாதானத்தை விரும்புபவர்கள். தெற்கிலும் வடக்கிலும் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடிய போது முஸ்லிம்கள் எவரும் அவர்களோடு இணைந்து செயற்பட்டதில்லை. போராடவுமில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு மத குரு இவ்வாறு செயற்பட அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அவரை யார் ஒளித்து வைத்துள்ளார்கள்? அவருக்கு அடைக்கலம் அளிப்பது யார்? இத்தகையோரை தூண்டிவிட்டு இன்னும் 30 – 40 வருடங்கள் இந்த நாட்டில் மீண்டும் போராட்டமொன்றுக்கு வழிவகுப்பவர்கள் யார்? இது தொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும், பிரதமர் மற்றும் ஜனாதிபதி தமது மேலான கவனத்தை இதில் செலுத்துவது அவசியம்.
இது தொடர்பில் நாம் பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக தெரிவித்துள்ளோம். நான்கு முறைப்பாடுகள் பொலிசில் மேற்கொள்ளப்படடுள்ளது. எனினும் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்கின்றன. எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. என்ன நடக்கின்றதென்றே தெரியவில்லை. முன்னைய அரசாங்கம் போன்றே தற்போதைய அரசாங்கமும் தவறிழைக்கின்றது.
நோன்பு நோற்று முஸ்லிம்கள் சமய கடமைகளை நிறைவேற்றும் இக் காலத்தில் அவர்களுக்குத் துன்பத்தையும் துயரத்தையும் மென் மேலும் தர வேண்டாமென நாம் கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் ஒரு மோசமான நிலை நாட்டில் உருவாக தூபமிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
பாராளுமன்றில்இருந்து-ரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத் 

கருத்துரையிடுக

 
Top