முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருப்பது குறித்து ஒன்றிணைந்த எதிரணி நேற்று சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தது. இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் பேசி தேவையான நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபைக்கு அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடர்பில் தினேஷ் குணவர்தன எம். பி. சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இங்கு உரையாற்றிய தினேஷ் குணவர்தன எம். பி.-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த 45 பாதுகாப்பு படையினர் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டது. தற்பொழுது அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றம் கவனம் செலுத்த வேண்டும்.
இது தொடர்பில் நான் பிரதமருடனும் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடனும் பேசினேன். அரசியல் குரோத நோக்கிலே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
அநுரகுமார திசாநாயக்க- (ஜே. வி. பி)
மேதின கூட்டத்தின் பின்னர் அந்த கூட்ட நிலைமைகளுக்கமைய ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை குறைப்பது உகந்ததல்ல. ஒருவருக்கு உள்ள அச்சுறுத்தலுக்கு அமையவே பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வாசுதேவ நாணயக்கார (ஐ. ம. சு. மு)
பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் வரையறையொன்று இருக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு நினைத்தபடி பாதுகாப்புக்கு பாதுகாப்புத் தரப்பினரை ஒதுக்குவது தொடர்பில் முடிவு செய்யப்படுகிறது.
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல-
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு முழுமையாக நீக்கப்படவில்லை. அவ்வாறான தேவை எமக்குக் கிடையாது. இவருக்கு விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
டளஸ் அழகப்பெரும எம். பி.-
சுமந்திரன் எம். பி.க்கு புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல ஆயிரம் மடங்கு புலிகளின் அச்சுறுத்தல் இருக்கிறது.
இது தவிர மஹிந்த ராஜபக்ஷவை தூக்கில் தொங்கவிடுவதாக அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top