இரட்டை பிரஜாவுரிமை காரணமாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான விஜித மலல்கொட மற்றும் நீதிபதி பிரீத்திப பத்மன் சுரேசன ஆகியோரின் தலைமையின் கீழ் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் முடிவை அடுத்து நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
 அவரால், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என, கடந்த முறை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்தின் குடியுரிமையைக் கொண்டுள்ளதால், இலங்கையின் அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்திற்கு அமைய, இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள ஒருவரால், பாராளுமன்ற உறுப்புரிமை பெற முடியாது எனத் தெரிவித்து, அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என, காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஐவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை குறித்த தீர்ப்புக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி இன்றைய தினமே (03) இரத்தாவதாக சிரேஷ்ட வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதற்கமைய, காலி மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலின் அதி கூடிய வாக்குகளை பெற்ற, முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, அவரது இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார என தெரிவிக்கப்படுகின்றது.
 

கருத்துரையிடுக

 
Top