(அகமட் எஸ். முகைடீன்) 

பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் வன்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வினவாத வன்செயல்கள் உடன் நிறுத்தப்படும் வகையில் இச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை அரசு உடனடியாக கைதி செய்ய வேண்டும். அத்தோடு இனவாத செயற்பாட்டு பிரதானியான ஞானசார தேரருக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஏனைய செயற்பாட்டாளர்கள் அடங்கிப்போகின்ற நிலை ஏற்பட வழிவகுக்குமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
    
முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் காட்டுமிராண்டித்தனமான இனவாத செயற்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. அண்மையில் பொலன்னறுவை ஒனேகம பிரதேசத்திற்கு சென்று இவர்களின் மற்றுமொரு இனவெறியாட்டத்தை அரங்கேற்றி இருக்கின்றார்கள். 

இதன்போது ஞானசார தேரர் முஸ்லிம்களின் ஏக இறைவனான எல்லாம் வல்ல அல்லாஹ்வையும், புனித அல்-குர்ஆனையும் தூசித்து மிக மோசமாகப் பேசி இருக்கின்றார். இது முஸ்லிம்களை சண்டைக்கு வலிந்திளுக்கின்ற செயலாகவே இருக்கின்றது.

அதேவேளை வெள்ளம்பிட்டி, கொஹிலவத்தை இப்றாஹிமியா ஜும்மா பள்ளிவாயல் மீது இனவாதிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு மூதூர் செல்வநகர் அருகிலுள்ள முஸ்லிம் கிராமத்தில் இனவாதிகள் காடைத்தனம் புரிந்துள்ளனர். இந்த நல்லாட்சி அரசிலும் இனவாதிகளின் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் குறைந்ததாக இல்லை. 

இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை பொதுபலசேனா, சிங்கள ராவய, சிங்கலே அபி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார் தமக்கு லேபலிட்டு மிக அப்பட்டமானமுறையில் மேற்கொண்டுவருகின்றனர். 

ஞானசார தேரர் போன்ற இனவாத செயற்பாட்டாளர்களை கைது செய்ய வேண்டும் என்று கடந்த ஆறு மாதகாலமாக பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சராகிய நான் பேசிவருகின்றபோதிலும் அவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இதனால் இவர்கள் வெறிநாய் போன்று தொடர்ச்சியாக இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டுவருகின்றனர். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் இந்நல்லாட்சியை உருவாக்குவதற்கான தேர்தல் கால பிரச்சாரத்தின் போது 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாக செயற்படுகின்ற ஞானசார தேரரை நாயை இளுத்துச் சென்று அடைப்பதுபோன்று சிறைக்குள் தள்ளி தகுந்த நடவடிக்கை எடுப்போம்' என்று கூறி மக்களின் வாக்குப் பெற்று ஆட்சிக்கு வந்தார்கள். 

ஆனால் இப்போது இந்த ஆட்சியிலும் மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளைப் போன்று எவ்விதத்திலும் குறைவில்லாமல் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார். இருந்தபோதிலும் இன்னும் அவரை அரசாங்கம் கைது செய்யவில்லை. 

எனவே இவ்வரசிடம் நாங்கள் வேண்டுவது சந்திரிகா கூறியது போன்று நாயை கட்டி இளுத்துச் சென்று அடைப்பதுபோன்று இவரை சிறையில் அடையுங்கள், இல்லாவிட்டால் முஸ்லிம் இளைஞர்களும் மக்களும் பொறுமை இழந்து வீதிக்கு வருகின்றபோது பெரும் விபரீதம் ஏற்படும். 

முஸ்லிம்களுக்கு எதிர்வரும் காலம் புனித ரமழான் நோன்பை நோக்கும் மாதமாகையால் முஸ்லிம்கள் அதிகமாக இரவுநேர வணக்கங்களில் ஈடுபடுகின்ற காலமாக காணப்படுகின்றது. இந்நிலையில் இனவெறியர்களின் இவ்வாறான செயற்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தம்மை தற்காத்துக் கொள்ளவேண்டிய தேவையும் உருவாக்கப்பட்டுள்ளது.
  
எனவே அரசு இவர்களின் விசமத்தனமான பிரச்சாரங்களையும் இனவாத செயற்பாட்டையும் பார்த்து ரசிக்காது அவர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைத்து இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படுவதை தடுக்க வேண்டும். அத்தோடு முஸ்லிம்கள் எவ்வித பீதியுமின்றி புனித ரமழான் மாதத்தில் தமது இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.   

கருத்துரையிடுக

 
Top