(அகமட் எஸ். முகைடீன்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது பிரதமரின் அமைச்சின் கீழ் வருகின்றமையினால் குறித்த மாகாண காரியாலயத்தை மீண்டும் சாய்ந்தமருதுக்கு கொண்டுவருவது தொடர்பாக மிகுந்த அழுத்தத்துடன் கூடிய வற்புறுத்தலாக பிரதமருடன் பேசுமாறும், சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வது தொடர்பாக பேசிவருகின்ற பிரதமர் சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்த ஒரு மாகாண காரியாலயத்தை அமைச்சு அதிகாரிகள் இனவாதமாக பெரும்பான்மை மக்கள் வாழும் அம்பாறை நகருக்கு மாற்றிய விடயத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமிடம் வேண்டிக் கொண்டார். 

எனவே, சீன விஜயத்தின்போது பிரதமருடன் தானும் செல்வதனால் குறித்த விடயம் தொடர்பில் அச்சந்தர்ப்பத்தில் பேசுவதாக அமைச்சர் றவூப் ஹக்கீம் பிரதி அமைச்சரிடம் உறுதியளித்தார். அதற்கமைவாக பிரதமரிடம் சீனாவில் வைத்து அழுத்தமாக தெளிவுபடுத்தி பேசியிருப்பதாக அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக தற்போது அவ்வலுவலகம் மீண்டும் சாய்ந்தமருதில் இயங்குவதற்கான உத்தரவுகள் பிரதமரின் அலுவலகத்தின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். 

மேலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண காரியாலயத்தை மீண்டும் சாய்ந்தமருதுக்கு கொண்டுவருவது தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகிய நானும் தலைவர் றவூப் ஹக்கீமும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டுவருகின்றோம், அதேவேளை குறித்த காரியாலயத்தை கொண்டுவருவதற்கு பல வழிகளிலும் பங்களிப்புச் செய்துவருகின்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் கழகங்கள், பொது அமைப்புகள் என்பவற்றுக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு இறைவனின் துணை கொண்டு விரைவில் இக்காரியாலயம் சாய்ந்தமருதில் இயங்கும் என நம்புகின்றேன் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top