இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அழைப்பு 

இஸ்ரேல் சிறைச்சாலைகளில் வாடுகின்ற பாலஸ்தீன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக இலங்கை பாலஸ்தீன தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து மகஜருக்கு இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்தார்.
 
பாலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக கையொப்பமிட்ட இராஜாங்க  அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 
முஸ்லிம்களின் புனித பூமியான பாலஸ்தீனத்தில் அத்துமீறி குடியேற்றங்களை நிறுவி வருகின்ற இஸ்ரேல், ஏராளமான பாலஸ்தீனியர்களை சிறைப்படுத்தி வைத்துள்ளது. பல ஆண்டுகளாக அரசியல் கைதிகளாக சிறையில் வாடுகின்ற அவர்கள் தற்போது உண்ணாவிர போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். 
56 பெண்கள், 28 ஊடகவியலாளர்கள், 100 நோயாளர்கள், 300 சிறுவர்கள், 13 நீதித்துறை கவுன்சில் உறுப்பினர்கள், 500 ஆயுள் தண்டனைக் கைதிகள் என சுமார் 6500 பாலஸ்தீனியர்கள் கடந்த மூன்று வாரங்களாக குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 
இதற்கு ஆதரவாக இலங்கை பாலஸ்தீன தூதுவராலயம் கையெழுத்து மகஜர் ஒன்றினை தயாரித்து வருகின்றது. இதில், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் என ஏராளமானவர்கள் கையெழுத்திட்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மகஜரில் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கையொப்பமிட முடியும். 
எனவே, இன மத பேதங்களை மறந்து குறித்த மகஜரில் அனைவரும் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் - என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top