கல்முனை, நற்பிட்டிமுனை ஆயுர்வேத வைத்தியசாலையை அதற்குரிய நிரந்தர கட்டிடத்தில் மீண்டும் திறக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அல்கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் இளைஞர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மேற்படி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் கருத்து தெரிவிக்கையில்;
“கடந்த 2014 ஆம் ஆண்டு தெயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனையில் இருபது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தில் மிகவும் சிறப்பாக இயங்கி வந்த ஆயுர்வேத வைத்தியசாலை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கிறது. தற்போது அவ்வைத்தியசாலை எங்கு இயங்குகிறது என்பது கூட பொது மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், மாகாண ஆயுர்வேத வைத்திய ஆணையாளர் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோரிடம் எழுத்து மூலம் முறையிட்டும் அதனை திறப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 150 பொது மக்களின் கையொப்பங்களுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தோம். அது தொடர்பில் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்திய ஆணையாளரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியபோது; அவ்வைத்தியசாலைக் கட்டிடம் 2016 ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படவிருப்பதாகவும் அதற்காக அந்த வைத்தியசாலை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வைத்தியசாலை கட்டிட புனரமைப்புக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பது மாகாண சபையின் நிதியொதுக்கீட்டு பட்டியலில் இருந்து அறிய முடிந்துள்ளது. அதேவேளை அப்படியொரு புனரமைப்புப் பணி இதுவரை ஆரம்பிக்கப்படவுமில்லை.
அரசியல் நோக்கங்களுக்காக வேறு ஒரு தேவைக்கு இக்கட்டிடத்தை பயன்படுத்தும் நோக்கிலேயே மாகாண சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கமைவாக இக்கட்டிடத்தில் இருந்து ஆயுர்வேத வைத்தியசாலை அகற்றப்பட்டிருக்கிறது என அறிய முடிகிறது.
ஆகையினால்தான் பொது மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, இன்று மீண்டும் ஒரு மகஜரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீனிடம் கையளித்து விட்டு, இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.கருத்துரையிடுக

 
Top