நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் ஆவேசம் இஸ்லாத்துக்கு எதிராக இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களினால் முஸ்லிம் இளைஞர்கள் மிகுந்த மனவேதனையுடன் இருப்பதாகவும், நல்லாட்சி அரசாங்கம்  இவ்வாறான இனவாத செயற்பாடுகளை தடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது போகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். 
முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் இஸ்லாம், அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ் தொடர்பாக  மிகவும் கீழ்த்தரமான – கேவலமான பிரசாரங்களை செய்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இனவாதம் பேசுபவர்களை கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
அதேபோன்று, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகின்ற போது முஸ்லிம்கள் அரேபிய கலாச்சாரத்னை பின்பற்றக் கூடாது எனத்தெரிவித்திருந்தனர். உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே கலாசாரம் தான் என்பதை நான் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். 
முஸ்லிம்கள் அறபு நாட்டில் இருந்தாலும் சரி வேறு எங்கு இருந்தாலும் சரி அனைவருக்கும் இஸ்லாம் ஒரே கலாசாரத்தை வழிகாட்டியுள்ளது. முஸ்லிம்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது தொடர்பில் ஒரு வாழ்க்கை வழிகாட்டலை ஷரீயா சட்டம் வரையறுத்துள்ளது. எனவே, எமது மார்க்க விடயங்களில் எவருக்கும் தலையிட முடியாது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றேன். 
 “முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழ முடியும். ஆனால் அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றக் கூடாது, குர்ஆனை பின்பற்றக்கூடாது” போன்ற கருத்துக்களை கூறி பொதுபல சேன ஞானசார தேரர் மீண்டும் இஸ்லாம் தொடர்பில் கேவலமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். நாங்கள் இந்த விடயம் தொடர்பில் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 
முஸ்லிம் சமூகத்தின் மூச்சே இஸ்லாம் தான் - வாழ்க்கையே குர்ஆன் தான் - உலகத்தில் நாங்கள் வாழ்வதே இந்த மார்க்கத்துக்காகத்தான். இந்த மார்க்கத்தை பின்பற்றக் கூடாது என யாராவது தடைவிதிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்தாகவேண்டும் என இஸ்லம் கூறுகின்றது. 
இன்று இஸ்லாத்துக்கும் - முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளினால் முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் மனவேதனையுடனும் - கவலையுடனும் இருக்கின்றார்கள். இஸ்லாமும், குர்ஆனும், அல்லாஹ் தொடர்பில் தொடர்ந்தும் விமர்சிக்கப்படும் போது முஸ்லிம் இளைஞர்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும். 
இனவாத செயற்பாடுகளை கட்;டுப்படுத்த முஸ்லிம் எம்.பிக்கள் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி முஸ்லிம் இளைஞர்கள் எங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனவே, இந்நிலை தொடர்ந்தும் இருக்குமாக இருந்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும். அவர்களது முதல் இலக்கு நாங்கள் தான். எங்களை படுகொலை செய்து விட்டே அவர்களுடைய போராட்டங்களை ஆரம்பிப்பார்கள்.
தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்திய பின்னர் முதலில் படுகொலை செய்தது தமிழ் அரசியல் தலைவர்களையே.  இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எமக்கு 30 ஆண்டுகள் போய் நாடு குட்டிச்சுவரனாது. இது போன்று, முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நாங்கள் இடமளிப்போமானால் இந்த பிரச்சினையை 50, 60 வருடங்கள் சென்றாலும் தீர்;க்க முடியாது போய்விடும் என்பதுடன் நாடு சீரழிந்துவிடும். 
இந்த நாடு பௌத்த நாடு. இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் சம உரிமை உள்ளது. முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு வந்தான் வரத்தான்கள் அல்ல மாறாக இந்நாட்டின் சொந்தக்காரர்கள். நாட்டின் அனைத்து தேசிய பிரச்சினைகளிலும் நாங்களும் பங்கு கொண்டுள்ளோம். நாட்டின் சுதந்திரத்துக்காக முஸ்லிம்களும் போராடியுள்ளனர். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக இரவு – பகலாக உழைக்கின்றோம். நாட்டை காட்டிக்கொடுத்தவர்கள் அல்ல முஸ்லிம்கள்.  நாங்கள் இராணுவத்துக்கு எதிராகவே – பொலிஸாருக்கு எதிராகவே  என்றுமே செயற்பட்டது கிடையாது. இந்த நாட்டை எமது உயிருக்கும் மேலாக நாங்கள் நேசிக்கின்றோம். எனவே, சகல இன மக்களும் தங்களது அரசியல் உரிமைகளோடு சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் - என வலியுறுத்தினார். 

கருத்துரையிடுக

 
Top