தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ்


இலங்கையில் மனித குலத்திற்கெதிரான பாரிய யுத்தம் முடிவுக்கு வந்த விட்டது. இருந்தாலும் புகை நின்ற பாடில்லை. அது மீண்டுமொரு காட்டுத்தீயினை உருவாக்குமா? என்ற அச்சம் எம்மை விட்டபாடுமில்லை. அதுபோலத்தான் இந்த நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தமான சுனாமி தாக்கமும் ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த இழப்பிற்கு தக்க நிவாரணம் கிடைத்ததா? என்பது ஒரு புறமிருக்க சிலருக்கு அது தங்கச் சுனாமியாகவே அன்று இருந்தது. மக்களின் உயிரிலும் இரத்தத்திலும் காட்டுமிராண்டி அரசியல் செய்தவர்களே இன்றும் அதிகாரத்தில் இருப்பது இந்த நாட்டுக்கு கிடைத்த பெரும் துரதிஸ்டமாகும் என தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார் 

அட்டாளைச்சேனையை மையமாக கொண்டியங்கும் மனித எழுச்சி நிறுவனமும் காணி உரிமைக்கான அம்பாரை மாவட்ட செயலணியும்  சேர்ந்து  மேற்கொண்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பான ஆய்வறிக்கையினை அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு இந்த தகவலை வெளியிட்டார் 

முஸ்லிம்களுக்கென தனியான உரிமை கோசம் முன்வைக்கப்பட்ட காலம் முதல் முஸ்லிம்களின் அரசியல் சாதித்ததை விட இழந்தவைகளின் பட்டில் நீண்டு கொண்டு வருவதானது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமிருந்து எமது சமூகத்தை விடுவிக்க ஒரு விடுதலை போராட்டம் தேவைப்படுவது போல் தெரிகின்றது என்றார் 

மேலும் தனது உரையில்இ சுனாமியனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 2005ம் ஆண்டு கட்டப்பட்ட 500 வீடுகளை கொண்ட இந்த வீட்டுத்திட்டம் இன்று பாழடைந்து வருகின்றது. எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட இந்த விடயத்தை ஒரு தேர்தல் கால வாக்குறுதியாக மட்டுமே கருதி செயற்படுகின்றனர் போகிற போக்கில் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் எகமுது கம்மான வாக மாறினாலும் ஆச்சரியமில்லை.

முஸ்லிம்கள் கடந்த பல தேர்தல்களில் ஆட்சியை தீர் மானிக்கின்ற சக்தியாக திகழ்ந்த போதிலும் அதனூடாக சில சோம்பேறிகள் அமைச்சுப்பதவி பெற்றதை தவிர அதில் முஸ்லிம்களின் அடிப்படை விடயங்கள் ஒரு கோரிக்கையாக முன்வைக்கப்படவில்லை. என்பது ஒரு கறைபடிந்த வரலாறாகும். 

இந்த வீட்டுத்திட்டமானது தீகவாபி புனித பிரதேசத்தின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பகுதிக்கள் வருவதால் இந்த வீட்டுத்திட்டம் தனியே முஸ்லிம்களுக்கு மட்டும் பகிரப்படக்கூடாது என்று சிலர் இன்று வாதிக்கின்றனர் அதே நேரம் அண்மையில் கருத்து தெரிவித்த கௌரவ அமைச்சர் தயா கமகே தீகவாபி 12000 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்டது என்றும் பொத்துவில் அக்கரைப்பற்று தொடக்கம் கல்முனை வரை தீகவாபியின் நிலப்பகுதிக்குள்ளேயே வருகின்றதென தெரிவித்தார் .மறுத்துப்பேச நமது தலைமைகளால் முடியாமல் போய்விட்டது. 

1959ம் ஆண்டின் தேர்தல் தொகுதிகள் எல்லை நிருணயத்தில், ஊவாமாகாணத்தில் மொனறாகலை மாவட்டத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்த பிந்தனைப்பத்து டீ.ஆர்.ஓ பிரிவில் உள்ள தெஹியத்தகண்டி, பதியதலாவ, மஹஓய பிரதேசங்கள் தற்காலிகமாக எனக்கூறி அம்பாறை மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் தொகுதிகள் எல்லை நிருணயசபை அதன் அறிக்கையின் 109 ஆவது பந்தியில் பிந்தனைப்பத்துவை மீண்டும் ஊவா மாகாணத்தோடு இணைக்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்டும் இன்னும் அது நடைபெறவில்லை. இதை பிரித்துக்கேட்க நமது தலைமைகளால் முடியாமல் போய்விட்டது. 

முஸ்லிம்கள் கடந்த 35 வருடங்களாக விவசாயம் செய்து வந்த வயல் நிலங்களான அம்பலத்தாறு, நுரைச்சோலை, தாலிபோட்ட ஆற்றுக்கண்டம், சேனைக்கண்டம், வேலமரத்து வெளி, சோலவட்டை, தொட்டாச் சுருங்கி வட்டை, கொண்டவெட்டுவான், மகாகண்டிய, வெள்ளக்கல் தோட்டம், சியாத்தரவட்டை, திராய் ஓடை, ஓமரங்கா வட்டை, பள்ளச்சேனை வட்டை, கீத்துப்பத்து வட்டை, கொச்சிக்காலந்து, பொன்னன்வெளி, குடுவில் வட்டைகளை செழிந்தோங்கும் காணிகளாக்கி அபிவிருத்தி செய்துகொண்டு வந்த பின்னர் 1965ம் ஆண்டில் கல்ஓய அபிவிருத்தியின் கீழ் இக்காணிகள் சீனிக் கூட்டுத்தாபனத்திற்கு கைப்பற்றப்பட்டது. இந்த காணிகளை முஸ்லிம்களுக்கு மீட்டுக்கொடுப்பது எமது கட்சிகளின் உரிமைப்போராட்டத்தில் இன்றுவரை இடம்பெறவில்லை. 

இந்த நிலையில் வெறுமனே 240 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்டிருந்த இந்த தீகவாபி எப்படி 12000 ஏக்கர் ஆனது? தீகவாபிக்கு 10000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டபோது பேசாமடந்தையாக இருந்த முஸ்லிம் சமூகத்தின் துரோகிகள் யார் ? என்பது பற்றி முஸ்லிம் சமூகம் சிந்தித்ததா? 

அக்கரைப்பற்று பிரதேசம் 1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரிவுக் காரியதிகாரி பிரிவாக இருந்த போது டீ.ஆர் .ஓ. வடக்கே களியோடையையும், கிழக்கே வங்காள விரிகுடா கடலையும், தெற்கே சங்கமன்கந்தையையும், மேற்கே எஹ்ங்கல மலை உச்சியை உள்ளடக்கியதாக தமண, சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் கிழக்கு எல்லையையும் கொண்டிருந்தது. வடக்கு கிழக்காக 35 கி.மீ. தூரத்தையும் கிழக்கு மேற்காக 35 கி.மீ. தூரத்தையும்  கொண்ட பரந்த பிரதேசமாக இருந்தது. 1972 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று பிரிவுக் காரியதிகாரி பிரிவில் வடக்கே முஸ்லிம்களுக்காக அட்டாளைச்சேனை பிரிவுக் காரியதிகாரி பிரிவும் அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு தெற்கே தமிழர்களுக்காக திருக்கோவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவொன்றும் 1985 ஆம் ஆண்டு மீண்டும் தெற்கில் தமிழர் களுக்கென ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவொன்றும் பிரிக்கப்பட்ட போது முஸ்லிம்களின் குடியேற்ற நிலங்கள் யாவும் இந்த நிலப்பகுதிக்குள்ளேயே உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே நேரம் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் முஸ்லிம்களுக்காக இந்த 500 வீடுகளும் கட்டப்பட்டதற்கு பகரமாக திருக்கோவிலில் 100 வீடுகளும் காலி மற்றும் மாத்தறையில் 100 வீடுகளும் சவூதி அரேபியாவினால் கட்டிக்கொடுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபிய அரசும் இலங்கை அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டம் என்று இத்திட்டம் கூறப்பட்டிருக்க, இன்று சுனாமி என்ற வார்த்தையை மாற்றி இந்த வீடுகள் இந்த மாவட்டத்தில் வதியும் மூவினங்களையயும் சேர் ந்த வீடற்றவர்களுக்கு விகிதாசார அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது மாவட்ட விகிதாசாரமா? அல்லது நாட்டில் காணப்படும் விகிதாசாரமா? என்பது கூட தெளிவு  படுத்தப்படவில்லை. 

தற்போது நமது அரசியல்வாதிகளின் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தினை நோக்கிய படையெடுப்பு நடக்கின்றது. திருத்த வேலைகளை மேற்கொள்ளப்போகின்றோம் . வீடுகளை கையளிக்கப்பொகின்றறோம் என்றெல்லாம் கூறுகின்றனர் . திருத்திய வீடுகளை யாருக்கு எந்த அடிப்படையில் கையளிக்கப்போகின்றீர்கள் என்பதையும் பகிரங்கமாக கூறிவைக்குமாறு அவர்களை நான் கேட்க விரும்புகின்றேன்.    

பயனாளிகளுக்கு தமது வீடுகளை கையளித்த பின்னர் திருத்த வேலைகளை பயனாளிகளின் முயற்சியோடு மேற்கொள்வதே சிறந்ததாகும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். அதே நேரம் இந்த பட்டியலில் இருப்பவர்கள் உண்மையான பயனாளிகளா? என்ற பரிசீலனை மிகவும் முக்கியமானதாகும். 

நீதிமன்ற தீர்ப்பொன்று இந்த விடயத்தில் இருப்பதால் சட்டம் சார்ந்த விடயங்கள் பற்றி அதிகம் கூற முடியாதுள்ளது. இருந்த போதிலும்இ இந்த விடயம் 9 நீதிபதிகளை கொண்ட மன்றில் மீண்டும் விசாரணைக்கு  எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். 

தற்போது முஸ்லிம் கட்சிகளில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் களான சட்டத்தரணிகள் இந்த வழக்கை ஏற்று நடத்த முன்வந்தால் இந்த வழக்குக்கான நிதியை மக்களிடமிருந்து திரட்டித்தர தனது கட்சி தயாராக இருப்பதாகவும் றியாஸ் மேலும் தெரிவித்தார். 


கருத்துரையிடுக

 
Top