கல்முனை பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட மருதமுனையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி இனந்தெரியாதோரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட் சம்பவம் இடம் பெற்றுள்ளது.


இச் சம்பவம் நேற்று(10) சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் மருதமுனையை சேர்ந்த 73 வயதான சீனித்தம்பி பாத்தும்மா என்பவராகும்.  இவரது சடலம் பெரிய நீலாவணைப் பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றில் இன்று(11) அதிகாலை 12.30 மணிக்கு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கொலை செய்யப்பட்ட மூதாட்டி நேற்று நோன்பு நோற்றுள்ளார். நோன்பு திறப்பதற்கு அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று பேரீத்தம் பழம் வாங்கி வந்ததை அயலவர்கள் கண்டுள்ளனர். வீட்டுக்கு வந்து நோன்பு திறந்தபின்னர் மஃரிப் தொழுகை நிறைவேற்றி விட்டு மீண்டும் அதே கடைக்கு வெற்றிலை வாங்கி வரச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதன் பின்னரே இவரை உறவினர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். இதே வேளை கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் பேரப் பிள்ளை முச்சக்கர வண்டியொன்றில் மூத்தம்மா சென்றதாக கூறுகின்றார்.

இதேவேளை அந்த மூதாட்டியின் கழுத்தில் 4 பவுண் தங்க சங்கிலியும்,கை விரலில் மோதிரமும், காதில்  தோடும் அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மூதாட்டி காணவில்லையென்ற செய்தி மருதமுனை மற்றும் அயல் கிராமமான பெரிய நீலாவணை பிரதேசமெங்கும் பரவத் தொடங்கின பெரிய நீலாவணையில் பெண் சடலமொன்று கிடப்பதாக கல்முனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்த போது உரிய இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலம் காணாமல் போன மூதாட்டியயுடையதென்பதை ஊர்ஜிதம் செய்தனர்.

மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகள் சூறையாடப் பட்டதன் பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு வீதியில் வீசப் பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயநாத் சிறி தலைமையில் விசாரணை துரிதப் படுத்தப் பட்டு அம்பாறை விசேட தட ஆய்வு  பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி கே.பேரின்பராஜா சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப் பட்டது.

கருத்துரையிடுக

 
Top