கல்முனையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தமக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி நேற்று திங்கட்கிழமை கல்முனை பிரதான பஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள வயல் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கல்முனைப் பகுதியில் சுமார் 1700 ஏக்கர் விவசாயக் காணிகளில் நெற்செய்கை பண்ணப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பெய்த மழையினால் அவை நீரில் மூழ்கி முற்றாக அழிவடைந்துள்ளன என்றும் அதனால் தாம் பெரும் நஷ்டமடைந்திருப்பதாகவும் இதற்காக தாம் பெற்ற கடன்களைக்கூட செலுத்த முடியாமல் திண்டாடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அது மாத்திரமல்லாமல் இந்த விவசாயத்தை நம்பி வாழ்கின்ற நூற்றுக்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நிர்க்கதியடைந்திருப்பதாகவும் இதன்போது விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
சுமார் 15 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து தமக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட மகஜர் ஒன்றை கல்முனை பிரதேச செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

 
Top