ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாடு நேற்று  சனிக்கிழமை காலை அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பொது மைதானத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான சரத் பொன்சேகா, தயா கமகே, மனோ கணேசன் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்ட இம்மாநாட்டில், அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி பங்குபற்றாமல் பகிஷ்கரிப்பு செய்திருந்தார்.

ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில் 
கட்சியுடன் முரண்பட்டுள்ள அனைவரும் இதற்கு வெளியே உள்ள குள்ளநரி குறுநில மன்னர்களின் அரசியலுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமாடுவதற்கு மேடையில் அமராமல் கட்சியைப் பாதுகாப்பதற்கு முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு, நேற்று பாலமுனையில் நடைபெற்ற மு.காவின் 19வது தேசிய நாட்டில் சிறப்;புரையாற்றிய நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நாட்டிற்குப் பின்னர் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும் என்;று பல எதிர் கூறுதல்களைச் சொன்னாலும், இந்தப் பெரும் மக்கள் சனத் திரளுக்கு முன்னால் இந்த இயக்கத்தின் மரச்சின்னத்தை, அதன் உறுதியை அழிப்பதற்கு யாரும் இடங் கொடுக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் பறைசாட்ட விரும்புகின்றோம்.
கட்சி பற்றிய விமர்சனங்களை கட்சிக்குள்ளேயே செய்வதற்கு வாய்ப்புக்கள் இருந்தும் பத்திரிகைகளின் ஊடாக கட்சியை விமர்சிப்பவர்களுக்கு மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நேற்று கட்சியைச் சேர்ந்த இருவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தியிருக்கின்றேன். இன்னும் ஒரு சிலரை இடைநிறுத்துவதற்கான தீர்மானத்தை இன்று நல்லிரவு எடுக்கத் தீர்மானித்திருக்கின்றேன். இந்தக் கட்சியை கட்டுக் கோப்பான இயக்கமாக வளர்த்தாக வேண்டும்.
இந்த நாட்டின் அரசியல் தலைமைகளுக்கு முன்னால் மிகப் பெரிய மாநாட்டை நடத்தி இந்த சமூகத்தின் உண்மையான அபிலாசைகளை எடுத்துரைப்பதற்கு இருக்கின்ற அந்த வாய்ப்பை யாராலும் தடுக்க முனைந்தால் அதனால் அவர்களுக்கு எந்த நன்மைகளும் இருக்கமாட்டாது.
கூலிக்கு எழுதுகின்றவர்களை வைத்துக் கொண்டு இக்கட்சியையும், தலைமையும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அம்பாரை மாவட்டத்திற்கு வெளியே இருப்பதனால் அம்பாரை மாவட்டத்திற்குரிய அமைச்சர் பதவி பறி போய் உள்ளதென்று கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் தலைமை எந்தப் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை அங்கிகரிக்கின்ற அரசியல் கொள்கையைத்தான் எமது மறைந்த தலைவர் காட்டியுள்ளார்.
எனக்கு வழங்கிய தலைமை என்பது அம்பாரை மாவட்ட மக்கள் வழங்கிய மகுடமாகும். சாய்ந்தமருது மண்ணிலே என்னுடைய தலையிலே சூடப்பட்டுள்ள இந்த மகுடத்தை இன்னும் நான் தாங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றால் அதற்கு இந்த மாவட்டப் போராளிகள்தான் காரணமாக இருக்கின்றார்கள்;. அவர்களுக்காக இக்கட்சியை தியாகத்துடன் முன்னெடுக்கும் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே நேரம், கட்சியுடன் முரண்பட்டுள்ள அனைவரும் இதற்கு வெளியே உள்ள குள்ளநரி குறுநில மன்னர்களின் அரசியலுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமாடுவதற்கு மேடையில் அமராமல் கட்சியைப் பாதுகாப்பதற்கு முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
நாங்கள் நிறைய சவால்களை எதிர் கொண்டிருக்கின்றோம். புதிய அரசியல் யாப்பு, தேர்தல் சீர்திருத்தம் என்று பல விடயங்கள் உள்ளன. இந்த ஆட்சியின் பங்காளர்கள் என்ற வகையிலும், நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி, பிரதமர் என்ற தைரியத்தோடு இவற்றிக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. முன்பெல்லாம் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற அடிப்படையிலே நாங்கள் இருக்க வேண்டிய நிர்ப்பந்தங்களை ஆக்கியவர்கள் இன்று மேடையில் வந்து வெறும் நாடகமாடுவதற்கு சேட்டுக்களையும் அணிந்து கொண்டு மேடையில் அமரும் அசிங்கம் கண்டு மிகவும் வேதனைப்படுகின்றேன். இந்த நாடகம் இன்றோடு முடிவுக்கு வர வேண்டும். இவர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும்.
இவர்கள் இந்த இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியை கைவிட்டு பதவி இருந்தால்தான் இந்தக் கட்சியில் நாங்கள் ஒட்டிக் கொண்டிந்தோம் பதவிகளுக்காகவே வக்காளத்து வாங்கினோம் என்ற கேவலமான நிலைக்குப் போகாமல், தங்களை தவறுகளை உணர்ந்து இதனைப் பலப்படுத்துவதற்கு வந்து சேர்ந்து செயற்படுமாறு கேட்கின்றேன்.முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டை கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி  பகிஷ்கரித்தார்.
பொதுச்செயலாளர் ஹஸன் அலி மாநாட்டில் பங்கேற்காததை வரவேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளர்கள், முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருக்கும் ஒரு முதுகெலும்பு உள்ள தலைவராக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று அதிருப்தியாளர் ஒருவர் அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதியும் பிரதமரும் அந்த மாநாட்டு மேடையை அலங்கரித்த போதும், அக்கட்சியின் செயலாளர் நாயகம் கலந்து கொள்ளாமை கட்சியின் தலைமைத்துவத்துவத்திற்கு பலத்த அவமானம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

 
Top