கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தின் (Gulf Federation for Kalmunai - GFK) ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ. எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய "கல்முனை மாநகரம்" உள்ளூராட்சியும், சிவில் நிர்வாகமும் எனும் வரலாற்று ஆவணப்பதிவு நூல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதி மாலை 6:00 மணியளவில் கட்டார் டோஹாவில் அமைந்துள்ள பிரண்ட்ஸ் கல்ச்சரல் சென்டரில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
தென்கிழக்கின் தலைநகராக இன்று அறியப்படும் கல்முனை மாநகரானது வெள்ளையன் ஆட்சி செய்த காலம் தொட்டு இன்று வரைக்கும் பல சிவில் நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அலகாக பிரகடணப்படுத்தப்பட்டு நிருவாகங்கள் நடந்து வந்துள்ளன என்பதை பல புகைப்படங்களோடும், இற்றைப்படுத்தப்பட்ட பல தரவுகளோடும் வெளிக்கொணர்ந்த்திருக்கிறது இந்நூல்.
கல்முனை மாநகரம் ஏலவே கரவாகுப்பற்றாக குறிக்கப்பட்டு சனிட்டார் போர்ட், லோகல் போர்ட், பட்டின சபை, பிரதேச சபை, நகர சபை, ஈற்றில் மாநகர சபையாக உருவெடுத்த வரையில் சகல சிவில் நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அதன் நிர்வாக கட்டமைப்பையும் இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கியதுதான் இந்நூலின் சிறப்பம்சமாகும். மேலும் முன்னர் காணப்பட்ட கல்முனை பட்டின சபை, கரவாகு வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய கிராம சபைகளில் தவிசாளர்கள், அக்கிராசனர் மற்றும் பிரதிநிதிகளின் புகைப்படங்களுடன் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நீண்ட நெடிய நம் பூர்வீகத்தை கத்தாரில் செறிந்து வாழும் நம் இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தினரால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
சகோதரர் முபாரிஸ் எம். ஹனீபா அவர்களின் தலைமையில் நூலாசிரியர் ஏம். எம். பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பட்டிமுனை மற்றும் இலங்கையின் நாலாபுரத்திலிருந்தும் கத்தாரில் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், உலமாக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நூலின் பிரதியினை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். சகோதரர் ரெளசூல் இலாஹியின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் நூல் அறிமுக மற்றும் விமர்சன உரையினை சகோதரர் எம். ஐ. பைறூஸ் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வின் ஏற்புரையினை நிகழ்வின் கதாநாயகன் நூலாசிரியர் ஏம். எம். பரக்கத்துல்லாஹ் நிகழ்த்தினார். இறுதியம்சமாக சகோ. எஸ். எச். எம். அஜ்வத் அவர்களின் நன்றி நவிலலோடு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
குறிப்பு: கத்தாரில் நூல்களை பெற விரும்புவோர் கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தினரை தொடர்புகொள்ளவும். (33013042 | 77221062)


கருத்துரையிடுக

 
Top