ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் மூலம் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் என பதில் செயலாளராக செயற்படும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
இன்று (08) இடம்பெற்ற ஐ.தே.க.வின் நிறைவேற்று குழு கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் இதில் எவ்வித கருத்துவேறுபாடும் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
 
காணி அமைச்சராக பதவி வகித்த காலஞ்சென்ற M.K.D.S குணவர்தனவின் தேசிய பட்டியல் வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்படவுள்ளார்.
 
இதேவேளை, நாளைய தினம் (09) சரத் பொன்சேகா பதவியேற்கவுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
 
கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரத் பொன்சேகா, 2010 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
 
ஆயினும், கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டதன் காரணமாக, 2010 ஒக்டோபர் மாதம் தனது பாராளுமன்ற பதவியை அவர் இழக்க நேரிட்டது.
 
இதனை அடுத்து கடந்த 2014 ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்ததை அடுத்து, பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டதோடு, அவர் இழந்த குடியுரிமை, ஓய்வூதியம் போன்றன மீண்டும வழங்கப்பட்டதோடு பீல்ட் மார்ஷல் பதவியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில், ஜனநாயக கட்சியில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
 
இந்நிலையில் அண்மையில் ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சரத் பொன்சேகாவிற்கு குறித்த பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
 

கருத்துரையிடுக

 
Top