சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறி முஸ்லிம் காங்கிரசில் இணையப்போகின்றார் என்ற செய்தி மற்றும் பல விடயங்கள் சமூக வலைத் தளங்களிலும், இணையத் தளங்களிலும் அண்மைக்காலமாக காட்டுத் தீ போல் பரவி வருகின்றது. இது தொடர்பில் மக்களுக்கு சில விடயங்களை தெளிவுபடுத்த நினைக்கின்றேன்.

கல்முனை மாநகர சபைத் தேர்தலிலே 2011 ஆம் ஆண்டு ஸ்ரீ ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி, வெறும் 45 நாட்களுக்குள் அரசியல் புரட்சி செய்து, கல்முனை மாநகர முதல்வர் என்கின்ற அரசியல் அதிகாரத்தைப் பெற்று, 2 வருடங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மக்கள் பணி செய்து அப்பதவியைவிட்டு வெளியேறினேன் என்பது யாவரும் அறிந்த விடயம். அக்காலப்பகுதியில் என்னால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பணியினை இன்றும் மக்கள் நினைவுகூர்ந்து பேசுகின்றனர். அப்பிரதேச மக்களின் அடிப்படைத் தேவையான திண்மக் கழிவகற்றுதல் மற்றும் வீதி விளக்குகளை ஒளிரவைத்தல் போன்ற விடயங்கள் கிரமமாக சரிவர நடைபெற்றது. இன்று அம்மக்களின் அவ்வடிப்படை தேவைகளை நிறைவு செய்ய முடியாது திண்டாடுகின்றனர்.

நான் பதவி ஆசை பிடித்தவனாக இருந்திருந்தால் அன்று அந்த மாநகர முதல்வர் பதவியை இராஜினாமா செய்யாது தொடர்ந்தும் இன்றுவரை முதல்வராக இருந்திருக்க முடியும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் வேண்டுகோளின் பிரகாரம் ஒருவார கால அவகாசத்தின் பின்னர் அப்பதவியினை இராஜினாமாச் செய்தேன். பின்னர் எனக்கேற்பட்ட கசப்பின் காரணமாக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சற்று ஒதுங்கி இருந்தேன். அதன் பின்னர் சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தினை பெறும் ஒரே ஒரு காரணத்திற்காக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுடன் இணைந்தேன். அது அந்த கால சூழ் நிலையின் தேவைப்பாட்டிற்கு அமைவாகவே அவ்விணைவு இடம்பெற்றது. அவருடன் இணைந்து ஒரு வருடமாக எந்த பதவியினையும் நான் பெறவுமில்லை, பதவிக்காக அவரிடம் அலையவுமில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருந்த காலப்பகுதியில் என்னை அழைத்து அவரது அமைச்சின் ஆலோசகராக பணியாற்றுமாறு பணித்தார்.  நான் அப்பதவியினை ஏற்க மறுத்தபோது சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் என்ற உணர்வினை உரசி, அதனை பெறுவதற்கான தறுணம் கனிந்திருக்கிறது என்ற செய்தியையும் கூறி என்னை உடன்படவைத்தார். இரண்டு மாதங்களின் பின்னர் நான் அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தேன்.

அதன்பின்னர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் சகோதரர் ஜெமீல், எஸ்.எஸ்.பி. மஜீட் மற்றும் வி.சி இஸ்மாயில் ஆகியோருக்கு முன்பாகவே அகில இலங்கை  மக்கள் காங்கிரஸில் இணைந்து செயற்பட்டேன். இதன்போது பாராளுமன்றத் தேர்தல் 2015ல் என்னையும் களமிறங்குமாறு தலைமை வேண்டிக் கொண்டதற்கினங்க போட்டியிட்டேன். அம்பாறை மாவட்டத்தில் மயில் தோகை விரிப்பதற்காய் பணத்தை செலவு செய்து, உடல் உள உழைப்பினை வழங்கியவர்களுள் பிரதானமானவனாக திகழ்ந்தேன். இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக காணப்பட்ட அம்பாறை மாவட்டத்தை ஆட்டம் காணவைக்கும் அளவுக்கு முன்னோக்கி பயணித்தோம். இறுதி முடிவு அறிவிக்கும் வரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்புடனேயே நாம் அன்று தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் கட்டுப்பாட்டு அறையிலே இருந்தோம். ஆனால் 33,000 இற்கும் அதிகமான வாக்குகளை எமது கட்சி பெற்றிருந்தபோதிலும் ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. திகாமடுல்ல மாவட்டம் முழுவதும் இக்கட்சிக்காக கூடுதலான பணத்தை செலவழித்து, மிகவும் விசுவாசத்துடன், இரவு பகல் பாராமல் மிகுந்த அர்பணிப்புடன் செயற்பட்டேன். மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டேன். அவ்வாறான எனது செயற்பாடுகள் கட்சிக்கு கணிசமான வளர்ச்சியினையும் வாக்குகளையும் பெற்றுத்தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எல்லோரும் மார் தட்டிக் கொள்கிறார்கள் நான்தான் கூடுதலான விருப்பு  வாக்குகளைப் பெற்றவன் என்று. ஆனால் வெகு சீக்கிரம் தெரியும் யார் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் என்று.  

எல்லா விடயங்களையும் மிகவும் உன்னிப்பாக அவதானிப்பவன் என்றவகையில் அறிந்த விடயம் கடந்த தேர்தலிலே ஒரே கட்சியில் இருந்து கொண்டு, ஊரைச் சேர்ந்தவரை தோக்கடிக்க வேண்டும் எனபதற்காக, மக்களை இக்கட்சிக்கு வாக்களிக்கவிடக்கூடாது என்று கங்கனம் கட்டி, அவரும் அவருடைய சகாக்களும் பித்தலாட்டங்களை மேற்கொண்டதெல்லாம் தெரியும் அவற்றை அலட்டிக் கொள்ளவில்லை. இவை கட்சியின் தலைமைக்கு விளங்கியதோ இல்லையோ என்பது தெரியாது. ஆனால் குறித்த நபர்களின் செய்ற்பாடு தொடர்பாக யூகித்து தலைமை செயற்பட வேண்டும்.

பதவி இல்லாதவர்கள், தொழில் இல்லாதவர்கள் அமைச்சரிடம் சென்று தொழில்களை, பதவிகளை பெற்றுக் கொண்டார்கள். ஒரு விடயத்தை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் நான் பதவிக்காக யாருடைய பின்னாலும் அலைந்து, காலில் விழுந்து, மண்றாடி, கெஞ்சி, கதறி பதவியினை பெறுபவன் நானில்லை என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்ஹம்துலில்லாஹ் என்னை இறைவன் அந்த அளவுக்கு வைக்கவில்லை. எனக்கு இறைவன் அனைத்தையும் தந்திருக்கின்றான். எனக்கென்று வியாபாரம் இருக்கின்றது, பிரசித்திபெற்ற கல்லூரி ஒன்று இருக்கின்றது, ஒரு சிலருக்கு அரசியலை விட்டால் தொழில் இல்லை. எனது கொள்கை எம்மைத் தேடி பதவிகள் வர வேண்டும், நாம் பதவிகளைத் தேடிப் போகக் கூடாது என்பது.
  
இந்த நிமிடம்வரை நாங்கள் கட்சியோடு இருக்கின்றோம், தலைமைத்துவத்துக்கு விசுவாசமாக இருக்கின்றோம். அது யாராக இருந்தாலும் சரி அமைச்சர் றவூப் ஹக்கீமாகவிருந்தாலும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவாகவிருந்தாலும், அமைச்சர் றிசாத்தாகவிருந்தாலும் எந்த தலைமையின் கீழ் நாமிருக்கின்றோமோ அந்த தலைமைக்கு விசுவாசமாக நாமிருப்போம்​ அதுவே எமது கொள்கை. பாராளுமன்ற தேர்தலுக்கா வேட்பு மனுவில் கையொப்பமிட்ட பின்னர் சிறிலாங்க முஸ்லிம் காங்கிரஸில் என்னை இணையுமாறும் பதவிகள் பல தருவதாகவும் கூறினார்கள். ஆனால் அவற்றை நாம் ஏற்கவில்லை. கட்சியில் இருந்து கொண்டு கட்சிக்கு எதிராக செயற்படுபவர்கள் நாங்களில்லை. எனவே இந்த நிடம் வரை நான் கட்சிக்கும் அமைச்சர் றிசாத்துக்கும் விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும் இருக்கின்றேன். என்னை கட்சியிலிருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று சிலர் செயற்படுகின்றனர். இதனால் ஒரு சிலரோடு எம்மையும் இணைத்து கதை சொல்கின்றனர். பொறுமையாக சகல விடயங்களையும் அவதானித்துக் கொண்டிருக்கின்றேன்.

எதைச் செய்தாலும் இதய சுத்தியுடனும் அர்பனிப்புடனும் ஆத்ம திருப்தியுடனும் செய்வது வழமை. அந்தவகையில் எனது மாநகர ஆட்சிக் காலப்பகுதியில் இரண்டரைக் கோடி ரூபாவினை நிலையான வைப்பில் வைத்துவிட்டு அப்பதவியிலிருந்து வெளியேறினேன். அம்மக்களை அன்றாடம் சந்தித்து அவர்களின் குறைகளை முடியுமானவரை நிவர்த்தி செய்தேன். திறைசேரியில் தேங்கியிருந்து நிதிகளை பெற்றெடுத்து திண்மக் கழிவகற்றல் மற்றும் வீதியோர மின் குமிழ் பொருத்துதல் மற்றும் பல அபிவிருத்திகளை இன, மத, பிரதேச வேறுபாடு இன்றி செய்தோம். அவற்றை இன்றும் மக்கள் நினைவுகூறுகின்றனர். அதனால் இன்றும் அம்மக்கள் எம்முடன் இருக்கின்றார்கள். எமக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும்போது அதைக்கொண்டு சிறந்த முறையில் மக்கள் பணி ஆற்றும் சக்தியும் வல்லமையும் எம்மிடமிருக்கின்றது. சவால்களைக் கண்டு சழைத்துப்போகின்றவர்கள் நாங்களில்லை. முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை மாநகர முதல்வர் பதவியிலிருந்து இடைநிறுத்துவதற்கு முயற்சித்தார். அவற்றுக்கு அஞ்சாது மீனவர் வாசிக சாலையினை திறந்துவைத்தோம். மக்கள் பணி ஆற்றுவதில் எத்தடைகள் வந்தாலும் அத்தடைகளை உடைத்தெறிவோம். அப்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எம்மோடு உறுதுணையாக இருந்தது. முதலமைச்சருக்குப் பின்னால் அவ்விடயத்தில் செயற்பட்டது யார் என்பதை அனைவரும் அறிவர். ஒரு சிலர் சிராஸ் மீராசாஹிபை உரசிப் பார்பதிலேயே காலத்தைக் கடத்துகின்றனர். எதற்கும் அஞ்சப்பேவதில்லை.

எனது குடும்ப உறவுகளுக்கு அப்பால் நட்பை நன்கு மதிப்பவன், நேசிப்பவன். அந்தவகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் எனது பாடசாலை காலம் முதலான நன்பன். அவருடன் எனக்கிருக்கின்ற உறவில் விரிசலை ஏற்படுத்த சிலர் முனைகின்றனர்.  இவர்களது உரசலால் எமது உறவு விரிசலாகும் என்று கனவு கான்கின்றனர். கனவு கலைவதற்கு நாட்கள் அதிகம் செல்லாது. 

கருத்துரையிடுக

 
Top