கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிந்த கையோடு அதிபர்களுக்கான வினைத்திறமை காண் தடைதாண்டல் பரீட்சை நடாத்தப்படுவது அவர்களை மிகவும் அசௌகரியத்திற்குள்ளாக்கும் விடயம் என இலங்கை கல்வி நிர்வாக சேவை கிழக்கு மாகாண சங்கம், பரீட்சை ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார், இன்று புதன்கிழமை பரீட்சை ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர தொலைநகல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவைப் பிரமாணத்தின் பிரகாரம் இம்மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடாத்தப்படவுள்ள வினைத்திறமை காண் தடை தாண்டல் பரீட்சையை உடனடியாக பிற்போட வேண்டும் என கோருகின்றோம்.
ஏனெனில் இந்த அதிபர்கள், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்பரீட்சை 17ஆம் திகதியன்றே முடிவுறுவதால் தூரப்பயணம் மேற்கொண்டு, குறித்த பரீட்சை நிலையங்களுக்கு உடனடியாக சமூகமளித்து, பரீட்சை எழுதுவதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இந்த அதிபர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் தமது வினைத்திறமை காண் பரீட்சைக்கு தம்மை தயார்படுத்தாததனால் இவர்களினால் திருப்தியான முறையில் பரீட்சை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய இது முதல் தடவையாக நடாத்தப்படும் பரீட்சை என்பதால் முன்னோடி வகுப்புகளில் பங்குபற்றி, பரீட்சையின் மாதிரி வினாத்தாள், அதன் உள்ளடக்கம் என்பவற்றை அறிந்து கொள்ள அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை.
இக்காரணிகளை கவனத்திற் கொண்டு குறித்த பரீட்சையை பிறிதொரு தினத்திற்கு பிற்போடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top