செனட்டர் மசூர் மௌலானாவின் அரசியல் ஈடுபாடு குறித்த ஓர் நூல் வாசிப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பகுதியான கல்முனைப் பிரதேசத்தின் வடக்குப் புறமாக அமைந்துள்ள ஓர் அழகிய கிராமமே மருதமுனையாகும்.

இக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஓர் அரசியல் ஆளுமையே மசூர் மௌலானா ஆவார்;. இவரது அரசியல் பிரவேசம், சிறுபான்மை அரசியலில் இவரால் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்பு என்பன குறித்த கருத்தாடலாக இக்கட்டுரை அமைகின்றது.


மசூர் மௌலானாவின் அரசியற் பிரவேசம்

தேசிய அரசியலுக்குள் மருதமுனை உள்ளீர்க்கப்பட்ட வரலாறு மசூர் மௌலானாவுடன் ஆரம்பிக்கின்றது. ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றிய மசூர் மௌலானா பின்னர் அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு காட்டியிருந்தார். 

கரைவாகு வடக்கு கிராம சபையின் தலைவராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்த மௌலானா, தந்தை செல்வா தமிழரசுக் கட்சியினை தொடக்கிய ஆரம்ப நாட்களில் அவரது அரசியலால் வெகுவாகக் கவரப்பட்டிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் அரசியல் பிரச்சாரங்களில் தந்தை செல்வாவுடன் இணைந்து அவர் பணியாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மௌலானாவுடன் சேர்ந்து மற்றுமொரு மருதமுனை மகனாகிய எஸ்.எல். அப்துல் லத்தீப் (மருதூர் வாணர்) என்பவரும் தமிழரசுக் கட்சிக்காக பாடுபட்டார் (நௌபல் 2012:29).


சிறுபான்மையினர் உரிமைக்காக போராடி சிறைவாசம் அனுபவித்த போராளி!

அதுமட்டுமன்றி தமிழரசுக் கட்சியின் சாத்வீக அரசியல் போராட்டங்களில் மௌலான தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தமையினையும் அவதானிக்க முடிகின்றது.

அதன்படி 1956ல் தமிழுக்கு சம உரிமை கோரி காலி முகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் 1961 அம்பாரைக் கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் எதிர்ப்புப் போராட்டத்திலும் தமிழ் தலைவர்களுடன் இணைந்து மௌலானா கலந்து கொண்டார். இதன் விளைவாக 4 மாதம் பனாகொட தடுப்பு முகாமிலும் அடைக்கப்பட்டார். 

சரித்திர முக்கியத்துவம் மிக்க திருமலை மாநாடு உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் மாநாடுகளில் முதலியவற்றில் கட்டாயம் ஒலிக்கப்படுகின்ற ஒன்றாக மௌலானாவின் குரல் மாறியது. (ஜெஸ்மி 2010). 


தவறிப்போன வெற்றி வாய்ப்பு!

தந்தை செல்வாவுடன் மௌலானாவுக்கு இருந்த தொடர்பு, அவரது போராட்ட உணர்வு என்பன 1960 மார்ச் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பான பிரதிநிதியான கல்முனைத் தொகுதியில் நிறுத்தப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.

எனினும் இத்தேர்தலில் எம்.எஸ்.காரியப்பரிடம் 212 வாக்குகளால் மட்டும் மௌலான தோல்யினைத் தழுவிக் கொண்டார்.

எம்.சி.அகமதை எம்.பியாக்கிய மௌலானா!

1960 ஜூலைத் தேர்தலில் எம்.சீ.அஹமத் அவர்களுக்கு தனது வேட்புரிமையினை விட்டுக் கொடுத்த மௌலானா அவரது தேர்தல் வெற்றிக்கு மருதமுனை மக்களை ஒன்று திரட்டுவதில் பெரும்பங்காற்றினார். இத்தேர்தலில் கல்முனைத் தொகுதியில் எம்.சீ.அஹமத் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் 1965 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மசூர் மௌலானா அவர்கள் எம்.எஸ்.காரியப்பரிடம் 491 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

1965ம் ஆண்டு தேர்தலினூடாக தேசிய அரசு முறைமை உருவாக்கப்பட்டது. டட்லியின் அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் இணைந்திருந்தது. 

இச்சூழ்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழிந்த போது கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் இலஞ்சக் கமிசனால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதன் பிரகாரம் அவர் குற்றவாளி எனக் காணப்பட்டதனால் கல்முனையில் 1968ல் ஒரு இடைத் தேர்தல் இடம்பெற்றது. 

தந்தை செல்வநாயகம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவரான மசூர் மௌலானாவை இத்தேர்தலில் தேசிய அரசின் வேட்பாளராக நியமிக்க அனுமதி அளித்திருந்தார். இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மௌலானா தனது செனட் பதவியை ராஜினாமா செய்தார்.

தேசிய அரசியலின் தலைவர்கள் எல்லாம் இச்சிறிய கல்முனைத் தொகுதியில் முகாமிட்டு மசூர் மௌலானாவின் வெற்றிக்காக பெரும் பங்காற்றினர்.

ஏ.எச்.எம்.அஸ்வர் (2013:29) இதனைப் பின்வருமாறு சித்தரிக்கின்றார்.

'இலங்கைத் தேர்தல் வரலாற்றிலேயே அரசாங்க எதிhக் கட்சித் துலைவர்கள் அவ்வளவு எண்ணிக்கையில் எந்தத் தொகுதியிலும் உப தேர்தல் பிரச்சாரம் செய்ய களமிறங்கிய வரலாறு கிடையாது.

இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்னெவெனில் மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் மகன் ஒருவரைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்ய சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டமையாகும். எவ்வாறாயினும் தேர்தல் முடிவில் மௌலானாவைத் தோற்கடித்து அஹமது வெற்றி கொண்டார்'. இத்தேர்தலில் 1254 வாக்குகளால் தோல்வியுற்றார்.

1967இல் செனட் சபை உறுப்பினராக இருந்த கற்குடாவைச் சேர்ந்த மு.மாணிக்கம் மரணத்தைத் தழுவிய பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தந்தை செல்வாவின் சமஷ்டிக் கட்சியின் செனற் பிரதிநிதியாக மசூர் மௌலானா நியமனம் செய்யப்பட்டார்.

சோல்பரி பாராளுமன்றத்தின் மேல் சபையாக விளங்கிய செனற் மன்றத்தின் பிரதிநிநிதியாக மௌலானா நியமனம் செய்யப்பட்டது மருதமுனை மக்களுக்கு மட்டுமன்றி, இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கான பெரும் கௌரவமாகிற்று.

பின்னாட்களில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக மௌலானா கட்சியிலிருந்து விலகியதுடன் ஐக்கிய தேசியக் கட்சியினை தமது அரசியல் பயணத்திற்காக தேர்வு செய்து கொண்டார். 

தனது அரசியல் பிரதிநிதித்துவம், அரசாங்கப் பதவிகள் மூலம் மருதமுனையின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய மௌலானாவின் அபிவிருத்திப் பட்டியல் கல்வி, கலாசாரம், மின்சாரம், விளையாட்டு, வீடமைப்பு என பல் துறைகளினூடாக நீண்டு செல்கின்றது.


மன்சூரின் வெற்றிக்கு கால்கோளாக அமைந்த மசூர் மௌலானா!

1977ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மன்சூரின் பாராளுமன்றப் பிரவேசத்திற்கு முழு ஆதரவினையும் மருதமுனை வழங்கி பக்கபலமாக இருந்தது. (அமீருல் அன்சார் 2013:94).

இது குறித்து மசூர் மௌலானா (2013: 18-19) அவர்கள் 
'1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக இவர் (மன்சூர்) பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதில் நானும் எனது மருதமுனை மக்களும் நூற்றுக்கு நூறு வீதம் பங்களிப்புச் செய்த சரித்திர நிகழ்வு இன்று என் கண்முன்னே நிழலாடுகிறது. மன்சூர் அவர்களின் வெற்றிக்காக என்னை நேசித்துஎனது தலைமைத்துவத்தை ஏற்றிருந்த நமது மருதமுனை மக்களையும் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை போன்ற கிராமங்களில் தமிழ் மக்களையும் ஓர் அணியில் திரட்டி ஆதரவளிக்கச் செய்து ஓர் கடின உழைப்புடன் விஷேடமான பங்களிப்பை வழங்கியிருந்தேன் என்பதை வரலாறு என்றும் நினைவு கூறும்!' என்று குறிப்பிடுகின்றார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இக்கிராமத்திற்கான மன்சூரின்  அரசியல், சமூகப் பொருளாதார, கலாசார ரீதியான பங்களிப்புக்களை நினைவு கூர்ந்து மருதமுனை மக்கள் மனமுவந்து பாரியதோர் பாராட்டு விழாவினை செய்திருந்தனர். அவ்விழாவில் விருட்ஷம் எனும் 164 பக்கங்களைக் கொண்ட  மலரையும் வெளியிட்ட இந்நிகழ்வில் மன்சூர் பின்வருமாறு கூறுகிறார். 

'மசூர் மௌலானாவின் தலைமைத்துவத்தில் மருதமுனை மக்களால்தான் நான் எம்.பி. ஆனேன். அதனால்தான் நான் அமைச்சருமானேன். இதனை என் வாழ்க்கையில் என்றும் மறக்கவும் மாட்டேன். நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் எனது கறைபடியாத கரங்களினால் அபிவிருத்திப் பணிகள் இவ்வூருக்குச் செய்ததன் காரணமாகவே இன்று நீங்கள் இவ்வாறானதோர்; நன்றி சொரியும் பெரும் விழாவினை ஏற்படுத்தியிருக்கின்றீர்கள்" என்று குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு மன்சூரின் அரசியலில் மருதமுனை மக்கள் முனைப்புடன் பங்களிப்புச் செய்தனர். மௌலானாவுடன் சேர்ந்து இப்பிரதேசத்தில் ஐ.தே.க. இன் இருப்புக்கும் மன்சூரின் அரசியல் வெற்றிக்கும் பலர் பங்காற்றியிருந்தனர். மன்சூர் மருதமுனைக்கு ஆற்றிய சேவைகளுக்கு பின்னாலும் இத்தகையோரின் அளப்பரிய பங்கு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


அநியாயத்தை எதிர்த்து தமிழரசுக் கட்சியை தூக்கி வீசியவர்!

மருதமுனையின் மசூர் மௌலானா சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவில்லை. அவர் தமிழரசுக் கட்சியுடன் தூய எண்ணத்துடன் இணைந்து செயற்பட்ட முஸ்லிம் தலைவராவார்.

மருதமுனைக்கும் நீலாவணைக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு முரண்பாடு காரணமாக மருதமுனை இளைஞர் ஒருவர் 1969 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தனது வீட்டு முற்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தினை அடுத்து அது தொடர்பிலான வழக்கு விசாரணை ஒன்று இடம்பெற்றதுடன் அவ்விசாரணையில் சுட்டவர் சார்பாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் தளபதி அமிர்தலிங்கம் அவர்கள் நீதிமன்றில் தோன்றியிருந்தார். இதன்போது மருதமுனை மக்கள் தமது ஆட்சேபனையினை வெளியிட்டனர். 

நாங்கள் முழு மொத்தமாக அக்கட்சிக்கு வாக்களிக்கின்ற போது எங்களுக்கு எதிராக நீதிமன்றில் அமிர்தலிங்கம் தோன்றுவது கூடாது என வாதிட்டனர். அமிர்தலிங்கம் அவர்கள் இம்மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கசப்படைந்த மருதமுனை மக்கள் மௌலானாவை கட்சியிலிருந்து விலகிட அழுத்தம் கொடுத்தனர். தன்னை அன்பாக நேசிக்கும் மருதமுனை மக்களின் வேண்டுகோளைத் தவிர்க்க முடியாத நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகினார். (மஜீத் 2008:17-18; அஸ்வர் 2013:81-82).

இந்நிகழ்வு கவலைக்குரியதொரு விடயமாக இருந்தபோதிலும் மருதமுனை மக்கள் தமிழ் தேசியவாதத்தின் அச்சத்தினாலேயே இவ்வாறானதொரு முடிவுக்கு வந்தனர் என்பது கவனிக்கத்தக்கதாகும். 

1985க்குப் பின்னர் துரிதமாக வளர்ச்சியடைந்த ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலை இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பினையும் விரோதத்தினையும் வெளிப்படுத்தின. துப்பாக்கி முனையில் முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டனர். இச்சூழல் தமிழ் முஸ்லிம் உறவில் பாரியளவான விரிசல்களுக்கு இட்டுச் சென்றது.

தமிழ்ப் பயங்கரவாத நடவடிக்கை மூலம் முஸ்லிம் உணர்ச்சி தீவிரம் அடைந்து முஸ்லிம் இனத்துவ அரசியல் எழுச்சி பெற்றது. நீண்ட காலமாக சிங்கள, தமிழ்ப் பிரச்சினையாக இருந்த இலங்கையின் இனப்பிரச்சினை சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரச்சினையாக மிகவும் சிக்கலடைந்து இலங்கையின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகியது. 

எப்படியாயினும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமை பற்றி முதன்முதல் பேசிய ஒரு முஸ்லிம் அரசியல் மகன் மசூர் மௌலானாவே (காதர் இப்றாகிம் 2008:20).

இது குறித்து இரா.சம்பந்தன் கூறுகையில்

'அல்ஹாஜ் மசூர் மௌலானா அவர்கள் ஒரு நீண்ட கால அரசியல் வரலாற்றுக்கு உரித்துடையவர். பெரியார் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களால் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்;ட காலம் தொட்டு அந்தக் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்களுடைய உரிமைகளுக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் என்பதில் எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. 

அவருடைய நாவன்மையின் மூலம் சாதாரண தமிழ் பேசும் மக்கள் எதிர் நோக்கும் ஆட்சி, அதிகாரம், காணி, மொழி, கல்வி, அபிவிருத்தி, சமூக, பொருளாதார, கலாசாரப் பிரச்சினைகள் சம்பந்தமாக மிகவும் தெளிவான கருத்துக்களை முன்வைத்து தமிழ், முஸ்லிம் நன்மதிப்பையும், அன்பையும், பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டவர். என்று குறிப்பிடுகின்றார்.'

முஸ்லிம் தனி அலகின் முதல் குரல்!


இதன் பிரகாரம் 1956ல் இடம்பெற்ற திருமலை மாநாட்டில் வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்பட இருக்கும் சமஷ்டி முறைமையில் முஸ்லிம்களுக்கென ஒரு உப சமஷ்டி அலகு உருவாக்கப்படும் என பிரகடனப்படுத்தப்பட்டது. தந்தை செல்வாவின் பரந்துபட்ட மனப்பான்மை இந்த முடிவின் பின்னணியில் இருந்தாலும் கூட மசூர் மௌலானா, எம்.எம்.முஸ்தபா ஆகிய முஸ்லிம் தலைவர்களின் தமிழ் தேசத்துடனான ஒன்றிணைந்த செயற்பாடும் சாணக்கியமும் இம்முடிவில் பங்களிப்புச் செய்திருந்தது.

மௌலானாவின் முதுமைக் காலத்தில் கல்முனை மாநகர சபை முதல்வராக சில வருடங்கள் கடமையாற்றி இப்பிரதேச அபிவிருத்தியில் பங்களிப்புகளைச் செய்து தடம்பதித்த ஓர் ஆளுமையாக கருதப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இவ்வகையில் மருதமுனையின் அரசியல், கல்வி, சமூக, பொருளாதார விருத்தியில் பின்னணி நாயகனாக மசூர் மௌலானா காணப்படுகின்றார். அத்துடன் சுதந்திரத்திற்குப் பின்னர் வியாபித்திருக்கும் தமிழ் - முஸ்லிம்களின் அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவராக மசூர் மௌலானா திகழ்கிறார். முஸ்லிம் அரசியல் கட்சிகள், அவற்றின் கோரிக்கைகள், முஸ்லிம் தேசம் பற்றிய கருத்துருவாக்கம் போன்றவற்றின் அடிநாதமாகவும் அவர் விளங்குகின்றார்.   

இவ்வாறான ஒரு அரசியல் ஆளுமையின் மருதமுனை மக்களும் இந்த நாடும் இன்று இழந்திருக்கின்றது. கருத்துரையிடுக

 
Top