ரூபவாஹினியின் செய்தி நடப்பு  விவகாரங்களுக்கான பணிப்பாளர் யூ. எல். யாக்கூப் 


தற்போதைய கால கட்டத்தில் ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை என ரூபவாஹினியின் செய்தி நடப்பு  விவகாரங்களுக்கான பணிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ. எல். யாக்கூப் நேற்றைய தினம் (25) நிந்தவூரில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு நிறைவுக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும்  உரை நிகழ்த்துகையில் ;  

கடந்த 10 வருட காலத்தில் ஊடகத்துறை என்பது அரசியல், அதிகாரம், பலம், படைப்பலம் இவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டு வாயடைக்கப்பட்ட ஊடகத்துறையாக காணப்பட்டது. ஆனால் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் அனைவரும் ஊடகத்துறை மீது வைத்திருந்த அவ நம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து இலத்திரனியல் மற்றும் சமூக வலைத்தளங்கள் இந்நாட்டில் பாரிய புரட்சியொன்றை ஜனவரி 08ல் செய்திருந்தன.  அதேபோன்றுதான் இவ்வாறான ஊடகங்கள் மூலமாகவும் மேற்கத்திய நாடுகளிலும் பாரிய புரட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகளும் அடைந்துள்ளன. 

தற்போதய கால கட்டத்தில் இலங்கையின் எந்த தரப்பாக இருந்தாலும் மக்களுக்கு எந்த செய்தி தேவையோ அந்த செய்திகளையே வழங்கி வருகின்றோம். நாம் செய்திப் பிரிவுகளைப் பொறுப்பெடுக்கும் போது மக்களின் தேவைப்பாடு, மக்களின் பார்வைகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. ஆனால் அந்த நிலை மாறி கடந்த 11 மாதங்களில் அதிகளவான மக்கள் தேசிய தொலைக்காட்சி செய்திகளையே விரும்பி பார்க்கின்றனர்.

அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் அதிக ஊடகவியலாளர்கள் உள்ளனர். அதிலும் தொலைக்காட்சிக்கு 16ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கடமை புரிந்து வருகின்றனர். இதன் மூலமாக இம்மாவட்டத்தில் வாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை  முன்கொண்டு வருகின்றோம். மேலும் கடந்த ஆட்சிபோன்று இந்த  ஆட்சியில் அரசியல்வாதிகளின்  அழுத்தங்களுக்கு அடிபணிய  வேண்டாம்  என  உயர்மட்டம் எமக்கு பணிப்புரை  வழங்கியுள்ளது. எனவே ஊடகவியலாளர்களும் அரசியல் வாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டுங்கள். மக்களுக்கு எது தேவைப்படுகின்றதோ அதை எடுத்துச் சொல்லுங்கள். மக்களுக்காக பணி செய்யும் அரசியல் வாதிகளை மக்கள் மயப்படுத்துங்கள்.  

கடந்த 2014ம் ஆண்டில் சர்வதேச ரீதியாக 214 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று கடந்த 10 வருடங்களில் எமது நாட்டிலும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தற்ற்போது அந்த நிலைமை தற்போது மாறிக்கொண்டு வருகின்றது.  இன்று இந்நாட்டிலே அச்சுறுத்தல்கள் கிடையாது. சர்வதேச ரீதியாகவும் பாரிய அழுத்தங்கள் இல்லை. எனவே இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் அரச ஊடகங்கள் மக்களுக்காக பணி செய்யக் காத்திருக்கின்றன. அவைகளை ஒவ்வொரு ஊடகவியலாளனும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். கருத்துரையிடுக

 
Top