அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் கதிரமலை பிரேமச்சந்திரனுக்கு, அம்பாறை பிராந்திய மேல் நீதிமன்றத்தினால் இன்று 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட நீதிமன்றத்திற்கு சொந்தமான சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை தனது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாக முன்னாள் பதிவாளர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.
கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 6 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறும் அம்பாறை பிராந்திய மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமசந்திர உத்தரவிட்டுள்ளார்.
அபராதம் செலுத்தாத பட்சத்தில் பிரதிவாதியான முன்னாள் பதிவாளருக்கு மேலும் ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதிவாதி நீதிமன்றத்தைப் புறக்கணித்து வந்தமையால், அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அம்பாறை பிராந்திய மேல் நீதிமன்ற நீதிபதி, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதியான முன்னாள் பதிவாளர் அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்டமை நீதிமன்ற விசாரணையின்போது நிரூபணமாகியுள்ளது.

கருத்துரையிடுக

 
Top