(பீ.எம்.எம்.ஏ.காதர் ,யு.எம்.இஸ்ஹாக் )

முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவின் ஜனாஸா  நல்லடக்கம் நாளை (05)காலை  மருதமுனையில்  நடை பெறும் என்று அவரது புதல்வர் இல்ஹாம் மௌலானா தெரிவித்துள்ளார் . கொழும்பு  மாளிகாவத்தை இல்லத்தில் இருந்து இன்றிரவு மருதமுனைக்கு  ஜனாஸா  எடுத்து வரப் படும் .
மருதமுனை மண்ணுக்கு மகுடம் சூட்டிய கல்முனை மாநகர சபையின் முனனாள் மேயர் செனட்டர் மசூர்மௌலானா இன்று(04-12-2015)காலை 2.30 மணியளவில் கொழும்பில் காலமானார் இறக்கும் பொது இவருக்கு வயது 84 ஆகும்.
இவர் இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சிசெய்த பல அரசியல் தலைவர்களோடு மிகவும் நெருக்கமான உறவைப் பேணி இனமத வேறுபாடுகளின்றி அனைத்து இன மக்கஞக்கும் சேவையாற்றியவர் இறுதியாக உயிருடன் இருந்த செனட்டர் இவர்தான். 
நோய்யுற்று படுக்கையில் இருக்கும் போதும்  கூட மருதமுனையின் அபிவிருத்தியைப்பற்றி  பேசிக் கொண்டிருந்தவர்.மருதமுனையில் வீதிகள், மின்சாரம்,விளையாட்டு மைதானம், வீட்டுத்திடங்கள் ,நூலம்,கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளுக்கும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர்.   
மசூர்மௌலானா 31.01.1932ம் ஆண்டு செய்யது ஐதுறுஸ் மௌலானா செயின் மௌலானா இஸ்மாலெப்பை போடியார் செயினம்பு தம்பதிக்கு மகனாக  மருதமுனையில் பிறந்தார்.ஆரம்பக்கல்வியை அப்போதய மருதமுனை அல்மனார் மகாவித்தியாலயத்தில் கற்றார்.
1942 ஆண்டு  ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் (டென்ஹாம் புலமைப்பரிசில்)மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு  செய்யப்பட்ட மூன்று மாணவர்களுள் முதலாவது மாணவராக தெரிவு  செய்யப்பட்டார்.
ஆறாம் வகுப்புத் தொடக்கம் உயர்தர வகுப்பு வரை  மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும், மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும்ஆங்கில மொழியின் மூலம் கல்வி கற்றார்.அங்கு நடைபெற்ற சிரேஷ்ட தராதரப்பத்திர பரீட்சையில் முதல் மாணவனாக தேறினார்.  
பின்னர் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற தமிழ் பேச்சுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மருதமுனை மண்ணுக்கு புகழ் சேர்த்தார்.
அரசில் பிரவேசம் 
இவர் தனது 17 வயதில் தந்தை செல்வநாயகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்அரசுக் கட்சியில் இணைந்து அரசியல் மேடைகளில் பிரச்சாரம் செய்தார்.அதன் பின்னர் 1960ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழரசு கட்சி சார்பாக கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு 119 வாக்குகளால் தோல்வியடைந்தார்.
1966ம் ஆண்டு  மருதமுனை மக்களின் ஏகோபித்த அதரவூடன் கரவாகு  வடக்கு கிராமசபையின் தலைவராகத் தெரிவு  செய்யப்பட்டார்.அன்று தொடக்கம் 1974ம் ஆண்டு வரை தலைவராக கடமையாற்றினார்.
அக்காலப் பகுதியில் அப்போதய அரசாங்கத்தின் அரசியல் வாதிகளின் எதிர்ப்புக்கு(1968-69)இருளில் மூழ்கிக்கிடந்த மருதமுனை கிராமத்திற்கு மின்சாரத்தைக் கொண்டு வந்து ஒளியூட்டினார்.அம்பாறை மாவட்டத்தில் முதலாவது தெருவிளக்கை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். 
அக்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் எந்தக் கிராமத்திலும் இல்லாத  சகல வசதிகளையும் கொண்ட பொது நூலகத்தை  மருதமுனையில் அமைத்தார் பலருக்கு தொழில் வாய்ப்புக்களையும்,சமாதான நீதவான் பதவிகளையும் பெற்றுக் கொடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாவின் ஆட்சிக்காலத்தில் ஹோட்டல் கோப்பிரேசன் தலைவராகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும், கல்முனை மாநகர மேயராகவும் கடமையாற்றியுள்ளர் .
மறைந்த  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அழைப்பில்  இறுதி அரசியல் பயணத்தை முஸ்லிம் காங்கிரசில் இணைந்து தொடர்ந்தார். 
இவரது  ஜனாசா  நல்லடக்கம் இவரது விருப்பத்தின் படி மருதமுனையில் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top