திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு காணியில் பெரும்போக நெற்செய்கைக்காக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட விவசாயிகளை தடுப்பதைக் கண்டித்து நேற்று அக்கரைப்பற்றில் அமைந்துள்ள வட்டார வன வளக் காரியாலயத்தின் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வட்டமடு விவசாயிகள் இம்முறை பெரும்போக நெற்செய்கைக்கென நிலப் பண்படுத்தல் வேலைகளை மேற்கொண்டிருந்த வேளையில் வட்டார வன வளக் காரியாலயப் பொறுப்பதிகாரி ஒருதலைப் பட்சமான தனது அதிகாரத்தினைப் பிரயோகித்து விவசாய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தியமையாலேயே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஒருதலைப்பட்டசமாக அதிகாரிகள் இயங்கக் கூடாது, விவசாயிகளின் வயிற்றில் வேண்டுமென்றே மண் போடாதே, இன ரீதியான முரண்பாடுகளை அதிகாரிகள் தோற்றுவிக்கக் கூடாது, கால வரையறையின்றி பொதுமக்களால் காரியாலயம் மூடப்படும் என்பன போன்ற பல்வேறு வாசகங்களைத் தாங்கியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு பதாதைகளை வன வளக் காரியாலய பிரதான நுழைவாயிலில் பொருத்தி விட்டு காரியாலய நுழைவாயிலை கயிற்றினால் கட்டி நுழைவாயிலின் முன்னால் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று பொலிஸார் விரைந்து நிலைமையினை சுமூகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், ஆக்ரோஷத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் சமாதானப்படுத்தி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொலைபேசியில் நிலைமையினை தெரியப்படுத்தி விவசாயிகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
நீண்ட காலமாக வட்டமடுப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கும் கால்நடை உரிமையாளர்களுக்குமிடையில் பிணக்குகள் நிலவி வந்த போதிலும் காலத்திற்குக் காலம் குறிப்பிட்ட நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நீதி மன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், தாம் நீதிமன்ற உத்தரவிற்கமைவாக இம்முறை விவசாய நடவடிக்கைகளை தொடர முற்பட்ட வேளையில் கடந்த வாரம் எமது வயல் பிரதேசத்திற்கு வருகை தந்த வள வன பொறுப்பதிகாரி வேண்டுமென்றே எமது உழவு இயந்திரத்தினையும் எம்மில் சிலரையும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தார்.
நாம் தற்போது பொலிஸிலிருந்து பிணையில் விடுதலையான போதிலும் இவ்விடயம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்விவசாயத்தினை நம்பி ஜீவனோபாயத்தினைக் கொண்டு செல்லும் எமக்கு வன வள காரியாலய பொறுப்பதிகாரி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு எம்மை நசுக்க முற்படுவது மிகுந்த கவலையளிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் வட்டமடு, பொத்தானை, பெரிதிலாவ, கூலாநுங்க, கஞ்சிகுடியாறு போன்ற வயற் பிரதேசங்களில் தமிழ் சிங்கள விவசாயிகள் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு அனுமதித்த மேற்படி அதிகாரி எமது முஸ்லிம் மக்களின் காணிகளைச் செய்கை பண்ண விடாமல் தடுத்து நிறுத்துவது ஒரு தலைப்பட்சமான நீதியாக அமைவதுடன், இன முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் செயற்பாடாகவும் அமைகின்றன என விவசாயிகள் ஆக்ரோஷத்துடன் தெரிவித்தனர்.
இன ரீதியாக செயற்படும் இவ்வதிகாரி சிலரிடம் பணத்தினைப் பெற்றுக் கொண்டு செயற்படுவதாகவும் குறிப்பிட்ட விவசாயிகள் எமது காணிகளில் இம்முறை விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிடாத விடத்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், இவ்வதிகாரியின் ஒருதலைப்பட்ட செயற்பாடுகளை ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

 
Top