கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் முன்னாள் சிரேஸ்ட மாணவத் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் மூத்த சகோதரருமான அல்ஹாஜ் ஹபீப் முஹம்மது முஹம்மது இஸ்ஸதீன் தனது 63 வது வயதில் நேற்று (17) கொழும்பில் காலமானார். ( இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் )

கல்முனைகுடியை பிறப்பிடமாக கொண்ட இவர் சாய்ந்தமருதில் திருமணம் முடித்திருந்தார் . இவருக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் மகனும் வாரிசாக உள்ளனர்.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் அல்ஹாஜ் கே.எல்.அபுபக்கர்லெப்பை அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் ( 1972 ) கல்லூரியின் சிரேஸ்ட மாணவத்தலைவனாகவும் , கல்லூரி விடுதில் தங்கி கல்வி பயின்றமையால் விடுதி மாணவத் தலைவனாகவும் , 1972 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர் மன்ற முதலாவது தலைவராகவும் , 1973 இல் அதே மாணவர் மன்றத்திற்கு பொருளாளராகவும் கடமை புரிந்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் வர்த்தக சங்கம் நடத்திய போட்டிப் பரீட்சையில் முதலாம் இடத்தையும் , அகில இலங்கை ரீதியில் கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் வர்த்தக சங்கம் நடாத்திய போட்டிப் பரீட்சையில் வர்த்தகம் மற்றும் கணக்கியல் பாடங்களில் முறையே 2 ஆம் , 3 ஆம் இடங்களையும் பெற்றார்.

இவரது அபார திறமையை அறிந்து கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கும் போதே ( 1974 ) இலங்கை வங்கியில் தொழில் வாய்ப்பும் கிடைத்தது.

1974 இல் இலங்கை வங்கியில் தொழில் வாய்ப்பு பெற்ற இவர் 32 வருடங்கள் லிகிதராக , உதவி முகாமையாளராக , முகாமையாளராக கடமையாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

கல்லூரியின் கிழக்குப்புறமாகவுள்ள காணி சுவீகரிப்பில் மிகவும் மும்முரமாக செயற்பட்ட அன்னார் கல்லூரியில் புந்தோட்டம் அமைத்தல் , மாங்கன்றுகள் நடுதல் மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.
விளையாட்டுப் போட்டிகளின் போது தனது திறமைகளை வெளிக்காட்டிய அன்னார் உதைபந்தாட்டக்குழு , கரப்பந்தாட்டக்குழு என்பவற்றிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதாக கல்லூரிா் தோழர்களும் , பழைய மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

 
Top