பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகள் வழங்குவதற்குப் பதிலாக வவுச்சர்கள் (பணரசீதுகள்) வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இத்திட்டத்தினூடாக இலங்கையில் 42 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சீருடைத் துணிகளில் 75 வீதமானவை மட்டுமே பயன்படுத்தப்பட்டன. மிகுதி 25 வீதமானவை பயன்படுத்தப்படாமை நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.

இதற்கு பிரதான காரணம் தரமற்ற துணிகளை வழங்கியமையேயாகும். அரச நிறுவனங்களினூடாக இந்த ஆய்வு செய்யப்பட்டது. 10 லட்சத்திற்கு ஒன்று என்ற வகையில் மாதிரிகள் ஆராயப்பட்டன.

இத்திட்டத்தில் மாணவர்கள் ஏதும் பிரச்சினைகளை எதிர்நோக்கினால் முறைப்பாடு செய்வதற்கான உபகுழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். அதற்கமைய உபகுழு அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


கட்டம் கட்டமாக பிரித்தே வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. அதற்கமைய ரூபா 400 தொடக்கம் 1700 ரூபா வரையில் வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இவ்வவுச்சர்கள் தரம் ஒன்று தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் பிக்கு மாணவர்களுக்கான உடைக்கு 1700 ரூபா வவுச்சர் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் வவுச்சரை பயன்படுத்தி சீருடைத் துணிகளை வாங்கிய பின்னர் ரசீதை வகுப்பாசிரியரிடம் கையளிக்கவேண்டும். விற்பனையாளர்கள் வவுச்சர்களை மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பவற்றில் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top