பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் கைதிகள் இன்று (11) முதல் கட்டம் கட்டமாக பிணையில் விடுதலை செய்யப்படள்ளனர் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்தது.
 இந்த வாரத்தில் முதற் கட்டமாக 31 தமிழ் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்படுவர் என சிறைச்சாலை ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.

பிணையில் விடுதலை செய்யப்பட இருப்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களமும் சிறைச்சாலை திணைக்களமும் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கு அறிவித்துள்ள போதும் நேற்று மாலை வரை கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடவில்லை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதே வேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 32 தமிழ் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட இருப்பதாகவும் இது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் தனக்கு அறிவித்துள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைதாகி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியதையடுத்து கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டிருந்தனர். இருந்த போதும் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை.

 பிரதமர் தலைமையில் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முதற்கட்டமாக 62 தமிழ் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய உறுதியளிக்கப்பட்டது. ஏனைய கைதிகள் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றை அமைத்து ஆராயவும் இதன் போது முடிவு செய்யப்பட்டது.

இந்தக் காலக்கெடு முடிவடைந்த போதும் கைதிகள் விடுதலை செய்யப்படாத நிலையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மெகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 93 கைதிகள், அனுராதபுரம் சிறையிலுள்ள 29 கைதிகள் மட்டக்களப்பு சிறையிலுள்ள 10 கைதிகள் மற்றும் போகம்பர சிறையிலுள்ள 12 கைதிகள் உட்பட 144 பேர் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.

தீபாவளிக்கு முன்னர் கைதிகளின் விடுதலை இடம்பெறும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும் அதுவும் இடம்பெறாதது குறித்து கைதிகளும் அவர்களின் உறவினர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று மெகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சொலிசிட்ட ஜெனரல் சுகத கம்லத் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய இருப்பது குறித்து கைதிகளுக்கு விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் சிறைச்சாலை திணைக்களத்தையும் தௌிவூட்டியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்துக்கு முன்னரும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் சந்தேகத்தின் பேரில் கைதான அநேக கைதிகள் வழக்கு தொடரப்படாமலும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாமலும் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நன்றி- தினகரன்

கருத்துரையிடுக

 
Top