சுகாதாரப் பிரதி அமைச்சர் பைசால் காசிமுக்கு கடிதம் 
அன்புள்ள சுகாதார பிரதி அமைச்சருக்கு!

நிந்தவூர் இரண்டாம் குறுக்கு தெருவானது ஊரின் மக்கள் நாளாந்தம் அதிகம் பிரயோகிக்கும் ஒரு வீதியாகும். இது கடந்த காலங்களில் இருந்த சீரற்ற நிலையினை கருத்திற்கொண்டு அரச ஒதுக்கீட்டின் பல மில்லியன் ரூபாய் செலவில் நீங்கள் உங்கள் கொந்தராத்துக்கள் மூலம் செப்பனிட்டதுடன் அதனை கடந்த செப்டம்பர் மாதமளவில் விழாச் செய்து திறந்து வைத்திருந்தீர்க்கள். நன்றி.
இவ்வாறு இவ்வீதியினை திறந்து வைப்பதற்கு முன்பதாக நிர்மான வேலைகள் இடம்பெறுகின்ற போதும் நீங்கள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு புகைப்படங்களுக்கு நிலைகொடுத்திருந்தீர்கள் என்பதனையும் இங்கு மறைக்க முடியவில்லை. இருப்பினும் இக்குறுக்குத் தெருவின் சில இடங்களில் தற்போதும் வடிகானுக்கான மூடிகள் இடப்படவில்லை. இதனால் வடிகான் மூடிகளுக்கான செலவினை அரசு ஒதுக்கவில்லையா? அல்லது அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில்தான் உங்கள் கொந்தராத்துக்கள் நாளாந்தம் தமது குடும்பத்திற்கு வேளைச் சாப்பாட்டினை கவனிக்கின்றார்களா? என மக்கள் கேட்கின்றனர்.
மேலும், இரண்டாம் குறுக்குத் தெருவினை அண்மையில் நீங்கள் திறந்து வைத்தபோதும், இரண்டாம் குறுக்குத் தெருவும் மற்றும் எச்.எம்.வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 'குளத்தினை' ஏன் அமைச்சர் இதுவரையில் திறக்கவில்லை என அப்பிரதேச மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். உங்கள் மீது அன்பினையும், ஆதரவினையும் கொண்டுள்ள இப்பிரதேச மக்கள் அதனை விரைவில் திறக்கவேண்டும் எனவும், அக்குளத்திற்கும் "காசிம் குளம்" என பெயரிட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள 'காசிம் குளமானது' கந்தளாய்க் குளத்தின் வரலாற்றிற்கும், சிறப்பிற்கும் நேரொத்ததாகும். கந்தளாய்க் குளமானது குளக்கோட்டன் என்ற அரசன் தனக்கு வசியமாயிருந்த பூதங்களை கொண்டு நிர்மானித்ததாகும். காசிம் குளமானது எமது மண்ணின் மைந்தர் திரு. பைசால் காசிம் அமைச்சர் அவர்களின் "காசிப் பேய்களால்" நிர்மானிக்கப்பட்டதாகும்.
எனவே, மக்களின் விருப்பிற்கும், தேவைகளுக்கும் முன்னுரிமை அளிப்பதாக (புகைப்)படம் போட்டுக் காட்டும் நீங்கள் மக்களின் இக்கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகின்றேன்.
விரைவில் திறக்கப்படவிருக்கும் "காசிம் குளத்தின்" அழகிய தோற்றத்தை கீழே படத்தில் காணலாம்.

கருத்துரையிடுக

 
Top