சமுர்த்தி உதவி பெறுவோர் 20

இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை 


‘திவிநெகும’ வேலைத் திட்டத்தை ‘சமுர்த்தி’ யென மீண்டும் பெயர் மாற்றம் செய்வதற்கென சட்டமூலம் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.
இதனடிப்படையில் சமுர்த்தி நிவாரணம் பெறுவோரின் எண்ணிக்கையினை 20 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
சமுர்த்தி நிவாரணம் பெற வேண்டியவர்களின் எண்ணிக்கையை திருத்தமாக கணிப்பிடுவதற்காக இன்னும் ஒரு வார காலத்தில் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் நவீன, தொழில்நுட்ப முறையிலான கணக்கெடுப்பு நடத்தப்படுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விசேட நிபுணத்துவம் கொண்ட அதிகாரிகளால் நடத்தப்படவுள்ள இந்த கணக்கெடுப்பில் சுமார் 20 இலட்சம் மக்களின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியன ஆராயப்படவுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
இலங்கையில் வறுமை நிலைக்கான சுட்டெண் 6.7 என்ற பெறுமானத்தை குறித்து நிற்கின்ற போது அதற்கு மேலதிகமாக பல இலட்சக்கணக்கான மக்கள் நிவாரணம் பெற்று வருகின்றனர். இது பற்றி ஆரம்ப காலம் முதல் பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இது குறித்து திருத்தமான புள்ளிவிபரங்களை பெறும் நோக்கிலேயே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர், சமுர்த்தி நிவாரணம் வழங்குவதனால் மாத்திரம் வறுமை நிலையினை ஒழித்துவிட முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அக்குடும்பத்தினருக்கு மேலதிக வருமானம் மற்றும் தொழில் முயற்சிக்கான உந்து சக்தியாகவே இந்த நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கணக்கெடுப்பின் பின்னர் எவரது சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவையும் ரத்துச் செய்வதற்கான எண்ணம் தற்போதைக்கு இல்லை. மாறாக அதனை மேலும் ஆறு இலட்சத்தினால் அதிகரிப்பதன் மூலம் 20 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணத்தை வழங்குவதே எமது இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த கணக்கெடுப்பை மிகவும் விஞ்ஞான ரீதியாக முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் கூறினார்.
சமுர்த்தி வேலைத் திட்டம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் வழங்கும் திட்டம் ஆரம்பகாலம் முதல் சமுர்த்தி என்ற பெயரிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தது. பின்னர் இது ‘திவிநெகும’ என பெயர் மாற்றம் பெற்றது. இதனை மீண்டும் பழையபடி சமுர்த்தியென பெயர் மாற்றுவதற்கே நான் விரும்புகிறேன். அதற்கான சட்டமூலங்கள் தற்போது மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே நடைமுறையிலிருந்த சமுர்த்தி அதிகார சபை சமுர்த்தி ஆணையாளர் திணைக்களம் என்பன திவிநெகும திணைக்களமாக உள்வாங்கப்பட்டிருந்தது. இதன் ஊழியர்களுக்கு நிலவும் நட்டஈடு, கொடுப்பனவு, இடமாற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு நான் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளேன்.
எனவே இதன் கீழ் சமுர்த்தி சேவையாளர்களுக்கு தாங்கள் விரும்பிய இடத்தில் இடமாற்றத்தை மறுக்காமல் பெற்றுத்தர நாம் தீர்மானித்துள்ளோம்.
சமுர்த்தி நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா பணம் எவ்வித இலாப நோக்கமுடைய முதலீடு செய்யப்படாமல் இருப்பதனால் அதனை பயனுள்ள வகையில் முதலீடு செய்வதற்கான பல யோசனைகளை அமைச்சு தீட்டியுள்ளது.
அதன் கீழ் சமுர்த்தி நிவாரணம் பெறுவோரின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு இலகு வட்டியடிப்படையில் கடன் வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்த வருமானம் பெறும் அரசாங்க மற்றும் தனியார் சேவையாளர்களுக்கு குறைந்த வட்டியடிப்படையில் 10 இலட்சம் வீதம் இந்தப் பணத்தினை கடனாக வழங்கவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.
சமுர்த்தி நிவாரணம் பெறும் தொழில் முயற்சியாளர் ஒருவர் நாளொன்றுக்கு 10 சதவீதம் படி வருடத்துக்கு 3650 சதவீதம் ரூபாவினை வட்டியாக செலுத்துகின்றனர். இந்த வட்டியிலும் குறைந்த சதவீதத்தை அமைச்சு அவர்களிடமிருந்து அறவிடுவது உசிதமாக இருக்குமென நம்புவதாகவும் அவர் கூறினார். 

கருத்துரையிடுக

 
Top