அபூபக்கர் ஹலீல் ரஹ்மான் எனும் முஸ்லிம் மகனுக்கு காரைதீவு மத்தியஸ்த சபையில் இடம்பெற்றிருக்கும் அநீதியை தட்டிக்கேட்பது யார் ?  கடந்த 2015.09.15 ம்திகதியன்று மத்தியஸ்த சபை ஆணைக்குழுவால் தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்த இவர் கடந்த மே மாதம்  நடைபெற்ற தேர்வில் அதிகூடிய புள்ளிகளை பெற்றிருந்தார் என்ற காரணத்தினால் இவரை மத்தியஸ்த சபை ஆணைக்குழு தவிசாளராக நியமித்திருந்தது. 

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஹிந்து சகோதரர்கள்  இனவாதம் எனும் நஞ்சை கக்கி இவரை பிரதி தவிசாளராக பதவி இறக்கியுள்ளனர். தமிழர்கள் அதிகமாக வாழும் காரைதீவில் தமிழர்கள் தான் சகலத்திலும் முன்னிலை  வகிக்க வேண்டும் என்பது முட்டாள் தனம். இவ்வளவு காலமும் ஒரே தாய் மக்களாக வாழ்ந்துவரும் தமிழ்,முஸ்லிம் சகோதரர்களின் ஒற்றுமையை சீரழிக்க சில பதவியாசை பிடித்த கயவர்களின் சதியை நன்கு உணர்ந்து நடுநிலையாக சிந்தித்து உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களை வேண்டிகொள்கிறேன்.

நடுநிலையாக சிந்திக்கும் தமிழ் அமைப்புக்களும் இந்த செயலை கண்டிப்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது உரியவர்களின் கடமை.தமிழர் தவிசாளராக வரவேண்டும் என கோரிக்கை வைத்து தமிழ் உறுப்பினர்கள் பகிஸ்கரித்தது போல 22.11.2015 அன்று முஸ்லிம் உறுப்பினர்கள் பத்துபேரும் நடுநிலையான முடிவு வரும் வரை சபையை பகிஸ்கரிக்க  எண்ணியுள்ளனர். இந்த மத்தியஸ்த சபை நியமனத்தில் அரசியல் பக்க பலமாக இருப்பது வெளிச்சமிக்க உண்மை.இந்த விடயத்தில் தலையிட்டிருக்கும் அரசியல் வாதிகள் உடனடியாக உங்கள் மனசாட்சியின் படி நடந்து கொள்ள முன்வாருங்கள். எந்த வித அறிவித்தலுமின்றி பதியிறக்கம் செய்திருக்கும் ஆணைக்குழு அரசியல் வாதிகளின் கைபொம்மையாக செயற்படாமல் சுதந்திரமாக செயட்படவேண்டியது காலத்தின் தேவை.

நல்லாட்சி அரசில் இனவாதம் தலைதூக்காமல்  இருக்க நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களிலும் இதுபோல பல சம்பவங்கள் இந்த  பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது.என்றாலும் மூடி மறைத்து  சகோதரத்துவ தன்மையுடன் பல விட்டுகொடுப்புக்களை மாளிகைக்காடு,மாவடிப்பள்ளி முஸ்லிம் சகோதரர்கள் செய்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். 

சகல மனசாட்சியுள்ளவர்களையும்  இனவாத சதியை முறியடித்து நீதியை நிலைநாட்டி சமாதானமான சூழலை உருவாக்க கரம் கோருக்குமாறு  அழைப்பு விடுக்கிறேன்.

இந்த சிறிய பிரச்சினையை சுமூகமாக தீர்க்க நாம் தவறும் பட்சத்தில் இது பக்ற்றீயா போன்று பரவி இனவிரிசலை உண்டாக்குவதுடன் சகோதரர்களாக வாழும் தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ மக்களிடையே பாரிய மனகஷ்டத்தை உண்டாக்கும். அதன் மூலம் பல போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது என்பது மறுக்கவோ/மறைக்கவோ முடியாத உண்மை. 

ஆகவே இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் சகோதாரர் அ.ஹலீலுரஹ்மான் அவர்களுக்கு உரிய நீதியை வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என தேசிய ஜனநாயக  உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் காரைதீவு பிரதேச இளைஞர் சம்மேளன மு.தலைவருமான தேசமான்ய அல்-ஹாஜ் ஹுதா உமர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top