அக்கரைப்ற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை துறைமுக வீதியில் இன்று (01) நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
உயிரிழந்தவர் ஒலுவில் 05ஆம் பிரிவைச்சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம். இஸ்மாயில் (63) என்பவராவார்.
 
குறித்த நபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அட்டாளைச்சேனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியின், ஒலுவில் துறைமுக பிரதான வீதிக்கு திரும்பும் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 
 
பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற மனைவியும் குழந்தையும் படுகாயங்களுக்குள்ளாகி பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
இதேவேளை இன்று (01) அதிகாலை 4.00 மணியளவில் அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியின், ஓலுவில் பிரதேசத்திலுள்ள திராய்க்கேணி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
 
அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபர் வீதியில் நின்றிருந்து மாடொன்றின் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பாரிய காயங்களுக்குள்ளான நிலையில் பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரான, ஒலுவில் சதாம் வீதியில் வசிக்கும் 38 வயதான சரீப்தீன் சபீக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
குறித்த நபர் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்த மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

 
Top