நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் அரசாங்க ஊழியர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் ஏமாற்றமளித்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். 

2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்  மேலுமை் கூறுகையில், அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுத் தொகையில் ரூபாய் 10,000 வை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமை சுமார் 18 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. மேலும், விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் மேற்கொள்ளப்பட்ட நெற்கொள்வனவு விலையும் குறைக்கப்பட்டுள்ளதுடன் கிருமி நாசினிகள் மற்றும் விவசாய உள்ளீடுகளின் விலையும் அதிகரிப்பட்டுள்ளன. 

தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலையினால் உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளுக்கு என்றுமில்லாத விலையேற்றமும் தட்டுப்பாடும் நிலவி வருகின்றமை மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சில அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளபோதிலும், அதிகமான பாவனைப் பொருட்களுக்கு விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதனால் ஏழை மக்கள் பெரும் வாழ்க்கை சுமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்றார். 

கருத்துரையிடுக

 
Top