கலாநிதி றமீஸ் அப்துல்லா 

(பி.எம்.எம்.ஏ.காதர்)

முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டினை அஷ்ரஃப் தனது அரசியலினூடாகக் கட்டமைத்திருக்கிறார். ஆனால் அஷ்ரஃபின் மறைவிற்குப் பின்னர் அந்த இலக்குத் தொடர்பாக நாம் பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. அதேநேரம் அஷ்ரஃபின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு என தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 20ஆவது வருட நினைவையும் நிறுவுனர் தினத்தையும் முன்னிட்டு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் விஷேட உரையாற்றிய போதே கலாநிதி றமீஸ் அப்துல்லா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது :-பெரிதும் வர்த்தக சமூகமாக அறியப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் எழுச்சி பிற்காலத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி காரணமாகவே மறுமலர்ச்சி அடைந்தது. அதிலும் குறிப்பாக 1980களில் நிகழ்ந்த இன சங்காரத்தின் காரணமாகக் கிழக்கு முஸ்லிம்கள் தமக்கென தனியானதொரு அரசியல் பாதையை உருவாக்கத் தொடங்கினர். அத்தகையதொரு பாதையை வகுப்பதற்குச் சட்டத்தரணி எம்.எச்.எம். அஷ்ரஃப் காரணமாக அமைகிறார்.

1960களில் இருந்து ஒரு பல்பரிமாணமுள்ள சமூக இயக்கவாதியாக இருந்த அஷ்ரஃப் வட - கிழக்கு அரசியல் சூழ்நிலையில் தமிழ் சமூகத்தோடு இணைந்த ஓர் அரசியல்வாதியாகவே இனங்காணப்பட்டார். அக்காலத்தில் பெரிதும் இடதுசாரிப் பண்புள்ள அரசியற் போக்கு அவரிடம் மிகைத்திருந்தது. தமிழரசுக் கட்சியிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் அரசியல் ஈடுபாட்டோடு இருந்த அவர் 1980களில் நிலவிய சூழ்நிலையின் காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற தனித்துவமான கட்சியினை நிறுவினார்.

1980களில் இருந்து தொடர்ந்த முஸ்லிம்களுக்கான இக்கட்டான அரசியல் சூழ்நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்வாக அமைந்ததோ இல்லையோ தென்கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கமும் ஒலுவில் துறைமுக உருவாக்கமும் அஷ்ரஃபின் அரசியலில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டது. முஸ்லிம்கள் மிகச் செறிவாக வாழ்கின்ற தென்கிழக்கிலே இத்தகைய இருமுயற்சிகளினூடாக இப்பிரதேசத்தை இலங்கையின் பிரதான மூன்று சமூகங்களினதும் ஊடாட்டத்திற்குரிய முன்மாதிரியான இடமாக மாற்ற வேண்டும் என்ற கனவு  அஷ்ரஃபிற்கு இருந்திருக்க வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்களைக் கொண்டதாகும். பல்கலைக்கழகத்தில் கற்பதும்,கற்பிப்பதுமான பணிகளில் ஈடுபடுவதோடு பல்கலைக்கழகத்தின் பிராந்தியம் தொடர்பான மறுமலர்ச்சிக்கும் பல்கலைக்கழக சமூகம் தயாராக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தினூடாக ஏற்படுகின்ற மாற்றம் அந்தச் மூகத்திற்குரியதாகவும் அந்த சூழலுக்குரியதாகவும் அமைய வேண்டும். இங்கு நிலவுகின்ற ஒரு பன்மைச் சூழலை - அதனோடு ஒட்டிய கலாசார சூழலை இந்தச் சமூகம் புரிந்து கொண்டாக வேண்டும்.

சவால் மிக்க தொழிற்சந்தையின் சக்திமிக்க போட்டியாளர்களாக இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மாறுவதோடு இங்கு கற்கின்ற பெண் மாணவர்களுடாக எழுகிற புதிய சமூக மாற்றம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் அஷ்ரஃபின் கனவாக இருந்திருக்க வேண்டும். 

மொத்தத்தில் முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டினை அஷ்ரஃப் தனது அரசியலினூடாகக் கட்டமைத்திருக்கிறார். ஆனால் அஷ்ரஃபின் மறைவிற்குப் பின்னர் அந்த இலக்குத் தொடர்பாக நாம் பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. அதேநேரம் அஷ்ரஃபின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு எனலாம் என அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top