அனுதாபச் செய்தியில் பிரதி அமைச்சர் ஹரீஸ் 


நாட்டின் நல்லாட்சிக்கு பங்களிப்பு செய்தவரும், இன ஐக்கியத்துக்காக பாடுபட்டவருமான மாதுலுவாவ சோபித தேரரின் மறைவு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பேரழிப்பாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

வண.மாதுலுவாவ சோபித தேரரின் மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் ஆட்சியாளர்கள் நேர்மையாக செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் சேவைகள் நாட்டின் அடிமட்ட வறிய மக்கள் வரை சென்றடையவேண்டும் என்ற நன்நோக்கத்தோடு பணியாற்றியவர்.
கடந்த ஊழல் மோசடி நிறைந்த அரசை மாற்றி தற்போதைய நல்லாட்சியை கொண்டுவருவதற்காக பல சவால்களுக்கு முகம் கொடுத்தவர். தவறு செய்யும் ஆட்சியாளர் எவராக இருந்தாலும் தைரியத்துடன் தவறை சுட்டிக்காட்டத் தயங்காதவர்.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட பொதுபல சேனாவினை நேரடியாக கண்டித்ததோடு முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களுக்கு பக்கபலமாக செயற்பட்டவர். நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக அரங்கேற்றப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமைக்காக ஒரு செயற்பாட்டாளராக செயற்பட்ட மனித நேயம் கொண்டவர்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் சோபித தேரரை சந்திப்பதற்காக அண்மையில் சென்றவேளை,
ஆட்சியாளர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக சமுர்த்தி திட்டம் விரிவாக்கப்பட வேண்டும் எனவும், அரசாங்கத்தினால் மக்களுக்காக கொண்டு வரப்படும் உதவித் திட்டங்கள் அடிமட்ட மக்களை சென்றடைய செயற்பட வேண்டும், தொழிலாளர்களின் நலன்களை பேண வேண்டும் என பல ஆலோசனைகளையும், கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இவ்வாறு நாட்டு மக்களையும் நாட்டையும் சிந்தித்து செயற்பட்ட ஒரு தலைமையை நாம் இழந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top